சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.
சிறைச்சாலைச் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை ஆராய்ந்து, அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பது இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும்.
இதற்கமைய, பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதகுருமார்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கும்போது பின்பற்றப்படும் சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் அடங்கிய இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரும் குழுவின் தலைவருமான பிரின்ஸ் சேனாதீர உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
