நாட்டில் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக இன்ஃபுளுவென்சா (Influenza) தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதம் இன்ஃபுளுவென்சா வைரஸுக்கு சாதகமாக (Positive) உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க் கண்காணிப்பு அமைப்பின் மூலமாக இந்தத் தொற்று வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் பலித கருணாபேம, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
பொதுவான அறிகுறிகள்: தற்போது நாட்டில் அறிக்கையிடப்படும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் பெரும்பாலானவை இன்ஃபுளுவென்சா தொற்றின் காரணமாகவே ஏற்படுகின்றன.
இது குறித்து மக்கள் வீண் பீதியடையத் தேவையில்லை என்றும், பெரும்பாலான நோயாளர்கள் உரிய சிகிச்சையுடன் 3 முதல் 4 நாட்களுக்குள் எவ்வித தீவிரப் பாதிப்புகளுமின்றி குணமடைந்து விடுவர் என்றும் தெரிவித்தார்.
கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு இன்ஃபுளுவென்சா தொற்றினால் பாதிப்புகள் தீவிரமடையும் அபாயம் அதிகம்.
பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ வெளிப்படும் சுவாசத் துளிகள் மூலமாகவும், தொடுதல் மூலமாகவும் இந்த வைரஸ் பிரதானமாகப் பரவுகிறது.
இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் தென்படுபவர்கள் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க 2 முதல் 3 நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சோப் போட்டு அடிக்கடி கைகளைக் கழுவுதல், காய்ச்சல் அல்லது சளி இருக்கும் போது முகக்கவசம் (Face Mask) அணிதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
