நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்தும் வகையில், அவர் பாராளுமன்றத்தில் விசேட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
புதிய சட்டமூலத்தின் ஊடாக, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்கள், ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்த முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தச் சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களும் திரிபுபடுத்தப்பட்ட விளக்கங்களும் பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நீண்ட தலைமுடி வைத்திருப்பவர்கள் அல்லது உடலில் பச்சைக்குத்தியிருப்பவர்கள் புதிய சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய தகவல்களுக்கும் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்திற்கும் தொடர்பில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டமூலத்தின் 4(2) ஆவது பிரிவில், குற்றவியல் விசாரணைகளின்போது பரிசீலிக்கக்கூடிய சில அளவுகோல்கள் தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கியுள்ளார்.
சர்வதேச ரீதியில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தனித்துவமான ஆடைகள், சைகைகள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அடையாளங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் குற்ற விசாரணைகளின்போது தொடர்புடைய சூழ்நிலைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தகைய அடையாளங்கள் மாத்திரம் ஒருவரைக் குற்றவாளியாகத் தீர்மானிப்பதற்கான இறுதிச் சான்றாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சட்ட அணுகுமுறைகள் சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சில அரசியல் தரப்பினரும் சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களும் தவறான தகவல்களைப் பரப்புவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனிநபர்கள் தமக்குப் பிடித்த ஆடைகளை அணிவது, விரும்பிய தலைமுடி அலங்காரங்களைச் செய்வது அல்லது பச்சைக்குத்திக்கொள்வது போன்ற தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு இந்தச் சட்டமூலம் தடையாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக நாட்டில் சட்டமொன்றை விமர்சிப்பதற்கும் அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு உரிமை உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பதிலாக ஜனநாயக வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
