Friday, October 30, 2026

இஸ்ரேல் வேலைவாய்ப்பு: 2027 முதல் புதிய நடைமுறை!

2 min read · 3 reads

இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்காக இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது, 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் (G-to-G) ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

இஸ்ரேல் அரசாங்கம் எடுத்துள்ள புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தற்போதைய திட்டம், 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும்.

கட்டுமானம், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வேலைவாய்ப்புத் துறைகளுக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான புதிய ஆட்சேர்ப்பு முறை, ஆட்சேர்ப்பு ஒதுக்கீடுகள் மற்றும் தெரிவு நடைமுறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோர், தனியார் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் வழங்கும் வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறும் தனிநபர்கள் அல்லது உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எவ்வித பணத்தையும் செலுத்த வேண்டாம் எனவும், மேலதிக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியாகும் வரை தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் திறன் பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஏனைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிடும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் நம்புமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக சட்டபூர்வமாக ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு பணம் செலுத்தியவர்கள் தொடர்பான தகவல்களை உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து பணியகம் கோரியுள்ளது. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.

தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களைத் தனியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மேலதிக அறிவுறுத்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மோசடி தொடர்பான சந்தேகங்கள் அல்லது ஏனைய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு செய்ய விரும்புவோர், பணியகத்தின் தற்போதைய முறைப்பாட்டு நடைமுறையின் ஊடாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

இலங்கை வேலைவாய்ப்புத் தேடுநர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பணியகம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.