Friday, October 30, 2026

ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல் இடிப்பு விவகாரம்: வக்ஃப் சபை மனு மீது முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் இல்லை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

2 min read · 10 reads
டெல்லி வக்ஃப் சபை சமர்ப்பித்த மனு மீது முடிவு எடுக்கும் வரை ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசலை இடிக்கப் போவதில்லை என்று நில மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) டெல்லி உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
இடிக்கப்படும் அபாயத்திலிருந்து பள்ளிவாசலை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி அனிஷ் தயாள் முன்பு வியாழக்கிழமை இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.
இருப்பினும், தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலுக்குச் செல்வதில் வழிபாட்டாளர்கள் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த பள்ளிவாசலானது புதுடெல்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் சுமார் 53 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ரேஸ் கோர்ஸ் கிளப்புக்குள் அமைந்துள்ளது.
வக்ஃப் சபையின் மனு மீது நான்கு வாரங்களுக்குள் இயன்றவரை விரைவாக முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு நிலையான ஆலோசகர் ஆஷிஷ் தீக்ஷித் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில் பள்ளிவாசலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார்.
இருப்பினும், இதே போன்ற வழக்குகளில் பல வழிபாட்டாளர்கள் நீதிமன்றத்தை அணுகுவதை அனுமதிப்பது ஒரு “பண்டோரா பெட்டியை” (பெரும் சிக்கலை) திறந்துவிடக்கூடும் என்று வாதிட்டு, மனுதாரரின் மனு தாக்கல் செய்யும் உரிமையை தீக்ஷித் கேள்விக்குட்படுத்தினார்.
மனுதாரர் சையத் அகமது சவுத் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எம். சுபியான் சித்திக், இந்த வாதத்தை எதிர்த்தார்.
முந்தைய விசாரணையின் போது, சபை  இடிக்கப்படும் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக சித்திக் வாதிட்டிருந்தார். மேலும், நுழைவு மற்றும் வெளியேறும் மீதான கட்டுப்பாடுகள் வழிபாட்டாளர்கள் மசூதிக்குச் செல்வதைத் தடுத்துள்ளதாகவும் அவர் சமர்ப்பித்திருந்தார்.
பள்ளிவாசலை பாதுகாப்பதற்கும் அதன் சட்டப்பூர்வப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் டெல்லி வக்ஃப் சபை போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும் மனுதாரர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மதத்தை கடைப்பிடிக்க தனக்கு சுதந்திரமான உரிமை உண்டு என்றும், பள்ளிவாசலுக்குச் செல்வது மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சவுத் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இவ்வழக்கின் அடுத்த விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.