இலங்கையில் பா.ஜ.க! | ராஜபக்ஷவுக்கு மோடி செக்?

Date:

முதன்முறையாக இலங்கையில் பா.ஜ.க-வைத் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதற்கு தேவைப்படும் உதவிகளை, தமிழக பா.ஜ.க கலைப்பிரிவு மாநிலச் செயலாளர் காயத்ரி ரகுராம் செய்துவருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் இந்துக்களின் கோயில்கள் புத்த விஹாரங்களாக மாற்றப்படும்போதெல்லாம், அங்குள்ள இந்துக்களுக்கு என ஓர் அரசியல் கட்சியைக் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து, அடங்குவது வழக்கம். இந்தக் கோரிக்கையை செயல்படுத்தும்விதமாக, மறைந்த தலைவர்கள் வாஜ்பாய், கருணாநிதிக்கு நெருக்கமானவரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய இலங்கை இந்து இயக்கங்களைச் சேர்ந்த சிலர், “இந்தியாவிலுள்ள கட்சிகளின் பெயரில் இலங்கையில் அரசியல் கட்சி தொடங்குவது புதிதல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் விடுதலைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சிலோன் நேஷ்னல் காங்கிரஸ் கட்சி. தமிழர்களும் சிங்களவர்களும் பங்கெடுத்த இந்தக் கட்சிதான் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது.

ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களால் தமிழர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டதுதான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். தமிழகத்தில் ம.பொ.சிவஞானம் அமைத்த தமிழரசுக் கழகத்தின் பெயரிலேயே, இலங்கையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். கொழும்பில் வாழ்ந்த மணவைத் தம்பி, திராவிட முன்னேற்றக் கழகத்தை இலங்கையில் அமைத்தார். அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியவுடனேயே இலங்கையிலும் இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான மதிமுகராசா என்பவர்தான் இந்த அமைப்பைத் தொடங்கி, அந்தக் கட்சியின் பெயரில் யாழ் மாநகர சபைத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

இப்படி காலம்காலமாக இந்தியாவில் உருவாகும் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் பெயர்களில் இலங்கையிலும் கட்சிகள் உதயமாவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அக்டோபர் 2016-ல் சிவசேனை என்கிற அமைப்பை இலங்கையில் மறவன்புலவு சச்சிதானந்தன் தொடங்கினார். டிசம்பர் 2017-ல், இலங்கையிலுள்ள இந்துக்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபடுவதற்கு தேவையான அனுமதியை இந்த அமைப்பு பெற்றுத் தந்தது. இதன் மூலமாக கடல்வழி மார்க்கமாக இந்துக்கள் தமிழகம் வந்து நடராஜரை வழிபட்டனர். இப்போது மறவன்புலவு சச்சிதானந்தன், இலங்கையில் பா.ஜ.க கட்சியை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக இந்துக்களின் கோயில்கள் புத்த விஹாரங்களாக மாற்றப்படும் சூழலில், அவர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொருட்டு இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். அவர் தொடங்கும் கட்சி வருங்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கெடுக்கவிருக்கிறது. இதற்காக, இந்திய பா.ஜ.க தலைவர்கள் சிலருடனும் மறவன்புலவு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தமிழக பா.ஜ.க கலைப்பிரிவுச் செயலாளர் காயத்ரி ரகுராம், இதற்கான உதவிகளைச் செய்துவருகிறார்” என்றனர்.

தமிழக பா.ஜ.க கலைப்பிரிவுச் செயலாளர் காயத்ரி ரகுராமிடம் இது குறித்துப் பேசினோம். “தலைவர் பிரபாகரன் காலத்தில், திருகோணமலை திருக்கோச்சீஸ்வரம் கோயில் 23 முறை சிதைக்கப்பட்டது. மீண்டும் எழுச்சியோடு மறுபுனரமைப்பு செய்யப்பட்டது. பிரபாகரனிடம் சிலர், ‘போர்க் காலத்தில் கோடுல்களை புனரமைப்பது தேவைதானா?’ என்று கேட்டனர். அதற்கு, `இது எங்களுடைய அடையாளம். எங்கள் கலாசாரத்தை அழித்துவிட்டால் எங்களை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நிறைவேறாது’ என்று பிரபாகரன் கூறினார். இன்று இந்துக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் சிலர் இலங்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். உரிமைகள் மறுக்கப்பட்டு இன்றும் தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் இருக்கிறார்கள். அதை பிரதமர் மோடியால் மட்டுமே மாற்ற முடியும்.

இதற்கான முதல்படியாக விரைவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் இலங்கையில் அமையவிருக்கிறது. அடுத்தடுத்து பாபா ராம்தேவ், ராமகிருஷ்ண மிஷன் ஆகியோரின் ஆசிரமங்களும் இலங்கையில் தங்கள் பணிகளைத் தொடங்கவிருக்கின்றன. இலங்கையிலுள்ள இந்துக்களின் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் பா.ஜ.க துணை நிற்கும். விரைவில் ஈழத் தமிழர்களின் அடையாளமாக பிரதமர் மோடி மாறுவார். கொரோனோ கெடுபிடிகள் முடிந்தவுடன், இலங்கையைச் சேர்ந்த சிலருடன் டெல்லி செல்லவிருக்கிறேன். அதன் பிறகு நடக்கப்போவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். இது ஓட்டுக்கான அரசியலல்ல. இது தமிழர்களின் உணர்வுக்கானது” என்று முடித்துக்கொண்டார்.

மறவன்புலவு சச்சிதானந்தன் தரப்பில் பேசியவர்கள், `இலங்கை பா.ஜ.க’ என்கிற பெயரில் கட்சி தொடங்குவதை உறுதிப்படுத்தினர். ஆனால், `உளவுத்துறைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதால், மறவன்புலவு சச்சிதானந்தன் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறார். விரைவில் உங்களைத் தொடர்புகொள்வார்’ என்று முடித்துக்கொண்டனர். இலங்கையில் தொடங்கப்படவிருக்கும் பா.ஜ.க., இந்திய பா.ஜ.க-வின் துணை அமைப்பாக இலங்கையில் செயல்படுமா அல்லது, தனி அமைப்பாக களப்பணியாற்றுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றனவாம்.

இராக், ஜோர்டன், சிரியா, லிபியா, லெபனான் போன்ற நாடுகளில் அரபு பாத் சோசியலிஸ்ட் கட்சியும், லெபனான், சிரியா, ஜோர்டனில் சிரியன் சோஷியல் நேஷ்னலிஸ்ட் கட்சியும் களம் அமைத்து, அந்தந்த நாட்டுத் தேர்தல்கள், உள்நாட்டுப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றன. இதுபோல, முஸ்லிம் பிரதர்ஹுட், வோல்ட் ஐரோப்பா போன்ற அமைப்புகளும் பல்வேறு நாடுகளில் தங்கள் கிளைகளை அமைத்து செயல்படுகின்றன. அதேவகையில், இலங்கையிலும் காலூன்றப் பார்க்கிறது பா.ஜ.க. சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவரும் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மோடி அரசு வைக்கும் ‘செக்’காகக்கூட இந்தக் காய்நகர்த்தல் பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் இலங்கை அரசியலில் எதிரொலிக்குமா என்பதெல்லாம் வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

நன்றி விகடன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...