மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்ட அவரது வருகை இன்று இடம் பெற உள்ளது. அவரது வருகை பற்றி பலரும் பல விதமாக பேசுகின்றனர். இலங்கை அரசாங்கம் அவரின் மூலமாக முஸ்லிம் நாடுகளின் உதவியை தனக்கு சார்பாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் பெறுவதற்காக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கான அழுத்ததித்தினை இம்ரானின் மீது பிரயோகிக்க இலங்கை சீனாவை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் தனது நலன்களை பாதுகாக்க சீனா இதனை ஒரு துரும்பாகப் பயன்படுத்துவதாகவும் சிலர் கருதுகின்றனர். இது உண்மையாயின், சீனாவினதும் பாகிஸ்தானினதும் உறவுகள் இதற்கு மேலும் வலுவூட்டும் என எதிர்பார்க்கலாம்.
துருக்கி, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடனான பாகிஸ்தானின் நட்புறவானது பல அரபு நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதால் இம்ரான் கானை எந்தளவு தூரம் இலங்கை அரசாங்கம் இது விடயத்தில் பயன்படுத்தலாம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே…முஸ்லிம் நாடுகளின் ஆதரவினைப் பெறும் விடயத்தில் ஜனாஸா எரிப்பு விடயமும் ஓரளவு எதிர்மறையாக செல்வாக்கு செலுத்தும் என்பதனையும் மறுப்பதற்கில்லை….
இது இவ்வாறிருக்க இம்ரான் கானின் வருகை தொடர்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் எதனை எதிர் பார்க்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. ஜனாஸா எரிப்பு விடயம் இம்ரான் கானுக்கு தெரியாத ஒன்றல்ல. முழு உலகிற்குமே தெரிந்த இந்த விடயம் அவருக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. ஏற்கனவே இது தொடர்பாக அவரை பலரும் பல மட்டங்களில் அணுகி உள்ளார்கள். இறுதியாக நேற்று முன்தினம் வைரலாகிய ஒரு சிறுவனின் (செல்வன் அம்மார்) உருக்கமான வேண்டுகோளைக் கூட அவர் பார்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டவர் ஒருவர் இன்று காலை தெரிவித்துள்ளார்.
தனது தாய்நாட்டின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட இம்ரான் கான் தனது அரசியல் ஈடுபாட்டினை விட்டுக் கொடுக்க முடியாததால் தனது லண்டன் மனைவியை 2004 இல் 9 வருட குடும்ப வாழ்வின் பின்னர் விவாகரத்துச் செய்தவர் என்பதும் தெரிந்த விடயமே.
முன்னைநாள் கிரிக்கெட்டர் சயீட் அன்வரின் முயற்சியால் இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்வில் மதம் தொடர்பான விடயங்களில் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடராக அவர் தஹஜ்ஜத் தொழுகையை நிறைவேற்றி வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். எனவே ஒரு சக முஸ்லிமாக மாத்திரமன்றி ஒரு முஸ்லிம் நாட்டின் தலைவராகவும் கூட அவர் ஜனாஸா விடயம் பற்றி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இலங்கை முஸ்லிம்களிடம் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை தீர்மானிக்கும் காரணிகளில் மதக் காரணிகள் பலத்த செல்வாக்கு செலுத்தி வருவதனை யாரும் இலகுவில் அலட்சியம் செய்து விட முடியாது என்பதனையும் இவ்வேளையில் நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.
இலங்கை-பாகிஸ்தானிய அரசியல், பொருளாதார, இராஜதந்திர உறவுகள் மிகவும் நெருக்கமானவை. குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கை நோக்கிய பாகிஸ்தானிய இராணுவ உதவிகள் இலங்கை பெரும்பான்மை மக்களால் என்றுமே மறக்க முடியாதவை. தனது பிராந்திய வல்லாதிக்கம், தேசிய பாதுகாப்பு என்பவற்றை முன்னிறுத்தி இந்திய அரசாங்கம் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு புகலிடம் கொடுத்து அதற்கு மேலதிகமாக ஆயுதப் பயிற்சிகளையும் கொடுத்து ஆயுதங்களையும் தேவையான பொருளாதார உதவிகளையும் (பண உதவி உட்பட) செய்த போது இலங்கை அரசாங்கம் இந்தியாவின் பரம விரோதியாகிய பாகிஸ்தானை தனக்கு சாதகமாக பயன்படுத்தியமை வரலாற்று உண்மை. இதில் பாகிஸ்தானும் நன்மை அடைந்தமை வேறு கதை.
எனவே இன்றைய பிராந்திய அரசியல் பொருளாதார சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இரண்டு நாடுகளுமே ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த முனைகின்றமை தெளிவு.
இலங்கையில் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்பினை சமாளித்து ஜனாஸா அடக்க விடயத்தில் அரசாங்கம் சாதகமான முடிவினைத்தர இம்ரான் கானின் உதவியை நிபந்தனையாக வைக்கவும் இடமுண்டு. அதாவது இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டைப் பாதுகாக்க இம்ரானின் உதவி தேவைப்படுவதால் அவரது கோரிக்கைக்காக இதனை செய்ய வேண்டி உள்ளது எனக் கூறி எதிர்ப்பாளர்களை சமாளிக்கவும் இடமுண்டு.
எது எப்படியோ… இரண்டு நாடுகளுமே இறைமை பெற்ற நாடுகள் என்பதால் இம்ரான் கான் ஒரு போதும் எல்லை மீறிய அழுத்தத்தினை பிரயோகிக்க மாட்டார் என்பது உறுதி. அவர்களது இரு-பக்க அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றிற்கு அப்பால் ஜனாஸா விடயம் பேசப்படல் வேண்டும் என்பதே ஒட்டு மொத்த முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்க்கையாக உள்ளது. சில வேளை இம்ரான் கான் நட்பு ரீதியாக இதனை சாதித்து தரவும் இடமுண்டு.
எது எப்படியாயினும் அதிக எதிர்பார்ப்பு என்பது தேவையில்லை என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
Dr Anees Sharif