அமெரிக்காவில் நடந்த `உள்நாட்டு பயங்கரவாதம்’ – எதைக் குறிப்பிடுகிறது எஃப்.பி.ஐ ?

Date:

ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என அமெரிக்காவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்!

ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு நாளாகப் பலரும் கருதினர். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருந்த அந்நாளில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கேப்பிடல் கட்டத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

கேப்பிடல் கட்டட தாக்குதலுக்கு ட்ரம்ப்தான் காரணம் என குற்றஞ்சுமத்தப்பட்டு செனட் சபையில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

ஏற்கனவே தனது ஆதரவாளர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகாமையில் கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், அனைவரும் கேப்பிடல் கட்டத்திற்கு முன் கூட வேண்டும் என்று பேசினார்.

ட்ரம்பின் பேச்சை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி கேப்பிடல் கட்டடத்திற்குள் நுழைந்தனர். பாதுகாப்பு வளையங்களை மீறி பல்வேறு தாக்குதல்களையும் நிகழ்த்தினர். காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக இதுவரை 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார் எஃப்பிஐ இயக்குநர்?

ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என எஃப்பிஐயின் இயக்குநரான கிறிஸ்டோஃபர் வ்ரே(Christopher A. Wray) தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு அவர் முதன்முதலாகப் பொதுவெளியில் தற்போது தோன்றியுள்ளார்.

ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் தொடர்பாக எஃப்பிஐ-யின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்க அமெரிக்க செனட்டின் நீதி விசாரணைக்குழு முன் ஆஜார் ஆனார் கிறிஸ்டோஃபர் வ்ரே.

அப்போது பேசிய அவர், `அமெரிக்காவில் உள்நாட்டு பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது’ என்று அச்சம் தெரிவித்தார்.

மேலும், `ஜனவரி 6ஆம் தேதி அன்று நடைபெற்ற வன்முறை பல பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கலாம்’ என்றும் தெரிவித்தார்.

“ஜனவரி ஆறாம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. பல தினங்களாக நாட்டில் உள்ளூர் பயங்கரவாதம் பரவி வருகிறது. அது அவ்வளவு சீக்கிரத்தில் நாட்டைவிட்டு செல்லாது” என்று தெரிவித்தார்.

தான் 2017ஆம் ஆண்டு எஃப்பிஐ-ன் இயக்குநராக பதவியேற்ற சமயம் உள்நாட்டு பயங்கரவாதம் தொடர்பான வழக்கு விசாரணை 1,000ஆக இருந்தது என்றும், அது கடந்த வருடம் 1,400ஆக அதிகரித்தது என்றும், அதுவே தற்போது 2,000ஆக அதிகரித்துள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.

அதேபோல வெள்ளை இன ஆதிக்கவாதிகள் மற்றும் பிற இன ரீதியாக செயல்படும் தீவிரவாதிகளின் கைது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகள் தங்களின் கொள்கைகளைப் பரப்ப இணைய வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், சமூக வலைத்தளங்களில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வெறுப்பு மற்றும் வன்முறை பேச்சுக்கள் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிர வலது சாரி, அரசு எதிர்ப்பு தீவிரவாதிகளை எஃப்பிஐ அடையாளம் கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அன்று வாஷிங்டனுக்கு வந்தவர்களில் சிலர் கடுமையான வன்முறையில் ஈடுபடவே வந்தவர்கள் என தற்போது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும் கிறிஸ்டோஃபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறை இடதுசாரி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதா என்று கிறிஸ்டோஃபர் வ்ரேயிடம் கேட்டதற்கு அது உண்மையல்ல என்று மறுத்தார்.

கிறிஸ்டோஃபர் வ்ரே எஃப்பிஐயின் இயக்குநராக 2017ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி விகடன்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...