ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சியியில் உள்ள காஸா பகுதியில் செழித்தோங்கும் ஜனநாயகம்

Date:

காஸா என்பது சுமார் 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் நடுவே சிக்கியுள்ள ஒரு பிரதேசமாக இது அமைந்துள்ளது. இங்கு சுமார் 15 லட்சம் பலஸ்தீன மக்கள் வாழுகின்றனர். உலகிலேயே மிகவும் சனத்தொகை நெரிசலான பகுதி இதுவேயாகும். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் பரம்பரையாக காணி பூமிகளுடன் அமைதியாகவும் நிம்மதியாகவும் அன்றைய பலஸ்தீனப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று அவர்களின் காணிகள் யாவும் பறிக்கப்பட்டு இஸ்ரேலிய படைகளால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் அகதிகளாக இந்தப் பகுதியில் தஞ்சம் புகுந்தவர்கள். இவர்களின் காணிகள் மற்றும் சொத்துக்கள் யாவும் யூத பயங்கரவாதத்தால் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தான் இன்று காஸாவில் வாழும் மக்கள். பிரிட்டன் தனது ஆதிக்க வல்லமையைப் பிரயோகித்து 1948ல் இஸ்ரேல் என்ற கொடிய யூத நாட்டை பலஸ்தீனப் பகுதிக்குள் பிரகடனம் செய்தது முதல் இந்த நிலை நீடிக்கின்றது.

1967 ஜுன் மாத காலப் பகுதியில் எகிப்து, ஜோர்தான், சிரியா. லெபனான் என்பனவற்றின் மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போது காஸா இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் சொல்லொணா அடக்குமுறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த மக்கள் வகை தொகையின்றி கண்டபடி கைது செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும, சநித்திரவதை செய்யப்படுவதும், ஏனைய கொடூரங்களுக்கு ஆளாக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நிகழ்வுகளாகி விட்டன.

காஸாவில் வாழும் மிகவும் கட்டுப்பாடான முஸ்லிம்களும் நன்கு படித்த முஸ்லிம்களும் அரச ஊழியர்களும், வைத்தியர்களும், ஆசிரியர்களும், சட்டத்தரணிகளும், சுகாதார சேவை ஊழியர்களும், பெறியிலாளர்களும், ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், மாணவர்களும் இரண்டறக் கலந்து ஒரு கலப்பு சமூகமாகவே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சமூகத்துக்கு வழங்கப்படும் எல்லா சேவைகளிலும் தங்கியிருக்கும் மக்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.

பல தசாப்தங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் அடக்குமுறை, மக்கள்; மீதான அவமானம் என்பனவற்றால் கிளர்ந்து எழுந்த பெரும்பாலான இளைய தலைமுறையினர் இஸ்ரேலை எதிர்த்துப் போராடினர். ஆனால் அவர்களிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைவானது. இருந்தாலும் தமது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி அவர்கள் போராடினர். தொடர்ந்து அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகும் ஒரு சமூகத்தில் இவ்வாறான எதிர் அலைகள் தவிர்க்க முடியாதவை.

இந்த வீரியம் மிக்க போராட்டத்துக்கு முகம் கொடுக்க முடியாத இஸ்ரேல் படைகள் 2005ல் மெதுவாக அங்கிருந்து பின்வாங்கினர். சுமார் 38 வருட ஆக்கிரமிப்புக்குப் பின் இந்தப் பின்வாங்கல் இடம்பெற்றது. காஸாவுக்கு உள்ள ஒரே ஒரு நுழைவாயிலான அல்லது தொடர்பு கொள்ளல் புள்ளியான றபா எல்லைப் பகுதி அதன் பின் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு ஐரோப்பிய யூனியனின் மேற்பார்வையின் கீழான பலஸ்தீன வீரர்களைக் கொண்ட ஒரு அணியும் நிறுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நீடித்த இஸ்ரேலின் தந்நதிரம் மிக்க ஆக்கிரமிப்பு மற்றும் எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தமை என்பன காஸா மக்களை வறுமையின் விளிம்புக்கு கொண்டு வந்தன. சுமார் 80 வீதமான மக்கள் தினசரி உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் தான் 2006 ஜனவரியில் அங்கு ஜனநாயக ரீதியான தேர்தல் இடம்பெற்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் தலைமையிலான ஒரு கண்கானிப்புக் குழுவின் கீழ் இடம்பெற்ற இந்தத் தேர்தல் மிகவும் நியாயமான முறையிலும் நீதியான முறையிலும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பலஸ்தீன மக்களின் நன்மைகளுக்காகவும் கௌரவமான சமாதானத்துக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஹமாஸ் இயக்கம் அந்தத் தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையோடு வெற்றிவாகை சூடியது.

காலஞ்சென்ற ஷேக் அஹமட் யாஸினும் இன்னும் சிலரும் சேர்ந்து 1987ல் ஸ்தாபித்த அமைப்பு தான் ஹமாஸ். பலஸ்தீனத்தின் முதலாவது இன்திபாதா (எழுச்சி) போராட்டத்தின் இறுதியில் இது உருவாக்கப்பட்டது. தானே எல்லாம் என்று தனித்து நின்று செயல்பட்ட பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் யஸர் அரபாத் பலஸ்தீன மக்களின் உரிமைகளை இஸ்ரேலிடம் விட்டுக் கொடுக்கத் தயாரானதை அடுத்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஹமாஸின் மூலாதாரம் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் பலஸ்தீனக் கிளையில் இருந்து தோற்றம் பெற்றது. பலஸ்தீன கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் துரிதமான சமூக அரசியல் கட்டமைப்பின் மூலம் இது விருத்தியானது.

இருப்பினும் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் மற்றும் அவர்களோடு இணைந்து செயற்படும் அரபு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் ஆகியோர் ஹமாஸ் இயக்கத்தை உலக பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக முத்திரை குத்தினர். பலஸ்தீனத்தை இஸ்ரேலிடம் இருந்து விடுவிக்கும் ஹமாஸின் சட்டபூர்வமான போராட்டமே இதற்கு காரணம்.
ஹமாஸ் இயக்கத்தை அடியோடு கவிழ்க்கும் பொறுப்பு பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்குத் தேவையான இலஞ்சம் அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கும் அவரது சகாக்களுக்கும் தேவையான ஆயுதங்கள் மற்றும் ஆயதப் பயிற்சி என்பனவற்றை அமெரிக்கா வழங்கியது. அமெரிக்கா ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும் ஒரு நாடு, அது ஜனநாயத்தை ஊக்குவிக்கும் ஒரு நாடு என்பது இங்கே கேலிக் கூத்தாக்கப்பட்டது.

இதனால் பலஸ்தீனர்கள் மிகக் கொரூரமான காட்டுமிராண்டித் தனத்துக்கு முகம் கொடுத்தனர். இஸ்ரேல் அமெரிக்கா தலைமையிலான அதன் மேற்குலக சகாக்களின் பூரண ஆதரவுடன் பலஸ்தீன மக்கள் மீதான தனது பிடியை மேலும் இறுக்கமாக்கியது. மேற்குலகமோ கண்மூடித்தனமாக அதை கவனிக்காமல் விட்டு விட்டது.

இஸ்ரேலிய சமாதான செயற்பாட்டாளர் யூரி அவ்னரி “பலஸ்தீனர்களுக்கான யூதர்களினதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினதும் செய்தியானது நீங்கள் பட்டினியின் விளிம்பை அடைவீர்கள். சரண் அடையாவிட்hல் அதற்கப்பால் உள்ள நிiயையும் அடைவீர்கள். நீங்கள் ஹமாஸ் அரசை ஆட்சியிலி இருந்து நீக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கீகரிக்கும் வேற்பாளர்களையே நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். பல துண்டுகளைக் கொண்ட பலஸ்தீனத்தோடு நீங்கள் திருப்தி அடைய வேண்டும். அந்தத் துண்டுகள் எல்லாமே இஸ்ரேலின் பூரண தயவில் செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறேனும் எல்லாவிதமான சதிகளையும் தாண்டி நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய ஏஜன்ட்டுகள் சிவில் யுத்தம் ஒன்றை தூண்டி விட்டும் கூட ஹமாஸ{க்கு எதிராக மக்களைத் திரட்டும் எல்லா முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளன. எதிர் மோதலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

33 வருடங்களின் பின் இன்று காஸாவில் மட்டும் அன்றி மத்திய கிழக்கிலேயே ஒரு பிரபலமான மக்கள் இயக்கமாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.
தனது உறுதியான கொள்கைகளைத் தொடர்ந்து பேணி வரும் ஹமாஸ் கடந்த மாதம் அதன் ஆலோசனை சபைக்கான தேர்தலை நடத்தி உள்ளது. புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆலோசனை சபைதான் அரசியல் பீடத்துக்கான தலைவர்களையும் உறுப்பினர்களையும் தெரிவு செய்யும். ஹமாஸ் பேச்சாளரின் கருத்துப்படி இந்த ஆலோசனை சபைத் தேர்தல் நீதியாகவும் வெளிப்படையாகவும் ஹமாஸின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது.

முஃதஸம் ஏ தலோல் என்ற பத்தி எழுத்தாளரின் கருத்துப்படி “பலஸ்தீன விடுதலை இயக்கத்தக்கு வெளியே ஹமாஸ் தான் இன்று மிகப்பெரிய பலஸ்தீன மக்கள் இயக்கமாகும். 2006ல் அது மிகவும் நேர்மையாக இடம்பெற்ற அதன் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியது. ஆனால் அன்று முதல் அது பல வெளிநாட்டு அரசுகளால் ஓரங்கட்டப்பட்டும் தடை செய்யப்பட்டும் உள்ளது. இந்த வெளிநாடுகள் தான் பலஸ்தீனத்தில் நீதியான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்தன. ஆனால் அவற்றின் எதிர்ப்பார்ப்பு அந்தத் தேர்தலில் தமக்கு சாதகமான பத்தாஹ் பிரிவு இலகுவாக வெற்றியடைந்து விடும் என்பதாகும்.”
ஹமாஸ் இயக்கம் தனது பிரபலத்தை எந்தக் குரையும் இன்றி மக்கள் மத்தியில் தக்க வைத்துள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றி பெற்றது முதல் அதன் கேந்திர நிலையமான காஸா பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்ரேல் மிகக் கொடூரமான தடைகளை விதித்துள்ள போதிலும் கூட ஹமாஸ் அதன் நிலையை அங்கு தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
ஹமாஸின் உறுதியான உள்கட்டமைப்புக்கள், நிறுவனமயப்படுத்தல் ஆற்றல் என்பன அதன் பிரபலமடையும் விடயத்தில் மிகவும் உச்சத்தில் உள்ளது என்பதை அதன் எதிரிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு சார்பான அரபு உலகம் உற்பட இஸ்ரேலின் யுத்த கொள்கை வகுப்பாளர்களும் தாக்குதல்களைத் திட்டமிடுபவர்களும் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இன்று ஹமாஸ் ஒரு ஜனநாயக இயக்கமாக கம்பீரமாக நிலைத்து நிற்கின்றது. அதன் சட்டபூர்வமான உரிமைகளை நிலை நாட்டுவதிலும், இஸ்ரேலை எதிர்த்தப் போராடுவதிலும், பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்வதிலும் ஹமாஸ் மிகவும் உறுதியாக உள்ளது. பலஸ்தீன விவகாரத்துக்கு நியாயமானதும் நீதியானதுமோர் தீர்வை அடைய வேண்டும் என உலகம் விரும்பினால் ஹமாஸை தனிமைப்படுத்துவதன் மூலம் அது சாத்தியமாகாது. மாறாக அதன் அந்தஸ்த்தையும் பிரபலத்தையும் ஏற்றுக் கொண்டு அதன் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செல்லாமல் அதனோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...