உலகில் மிகவும் பிரபலமான சுறுசுறுப்பு மிக்க நீர் நிலையான சுயஸ் கால்வாயில் இன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் றொட்டர்டாம் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக கொள்கலன் தாங்கி கப்பலான எவர் கிவன் என்ற கப்பல் சுயஸ் கால்வாயின் வழமையான கப்பல் போக்குவரத்து பாதையை விட்டு விலகி கால்வாயின் பக்கவாட்டு பகுதியில் உரசும் வகையில் சென்றதால் அதற்கு பின்னால் வந்த பல கப்பல்கள் தமது பயணத்தை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடல் வழியாக மத்தியதரைக் கடல் பகுதியை இணைக்கும் பிரதான நீர்வழிப்பாதையே சுயஸ் கால்வாயாகும். இதுவே உலகின் மிகவும் சுறுசுறுப்பான கப்பல் பயணப் பாதையாகும். தினசரி சுமார் 50க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்தக் கால்வாயைக் கடந்து செல்கின்றன. குறிப்பிட்ட கப்பலில் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பே அது வழமையான பாதையை விட்டு விலக பிரதான காரணமாகும். அந்தக் கப்பல் பாதையை விட்டு விலகிய சிறிது நேரத்தில் பின்னால் வந்த சுமார் 15 கப்பல்களின் பயணம் தடைபட்டுள்ளது.
இந்தக் கப்பல் இரண்டு லட்சம் தொன் எடை கொண்டது. அதன் நீளம் 400 மீற்றர்களாகும். அகலம் 59 மீற்றர்களாகும். இந்தக் கப்பல் 20 அடி நீளம் கொண்ட 20 ஆயிரம் கொள்கலன்களை ஒரே நேரத்தில் சுமந்து செல்லக் கூடியது.