மே 12 : உலக தாதியர் தினம் : மீண்டெழுந்து இன்னொரு தாய்!

Date:

பொதுமக்களுக்கு தாதியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச தாதியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் திகதி கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “தாதியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக தாதியர் அமைப்பு (ICN – International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன தாதியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் திகதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச தாதியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள தாதியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் தாதியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு தாதியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மே 12: உலக செவிலியர் தினம்: மறுஅவதாரம் எடுத்த இன்னொரு தாய்!

கை விளக்கேந்திய காரிகை’ நைட்டிங்கேல்!

நவீன தாதியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.’கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.

பிரிட்டனில் செல்வச் செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் தாதியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.

வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் டையினரைக் குணப்படுத்தினார்.

இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.தங்களை காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.

போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார்.

நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அவருக்கு பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்’ என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை பாராட்டுவது மிக அவசியம்.

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்!

நன்றி விகடன்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...