இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறையும் தேர்தலில் வெற்றிபெற்று உறுதியான ஒரு ஆட்சியை அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான பலிபீடமாக பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தை பாவிக்க தொடங்கியுள்ளார்.
காசா பிரதேசத்தில் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மூலகாரணம் பெஞ்சமின் நெதன்யாகு வில் பிரதமர் பதவியே ஆகும். தேர்தலில் தோல்வியை சந்தித்து ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அவர் இப்போது அதனை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காக வழமைபோல் பலஸ்தீன மக்களை பலி கொடுக்க தொடங்கியுள்ளார்.
அவரால் ஆட்சி அமைக்க முடியாது போன நிலையில் அந்த வாய்ப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தான் தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு முழு உலகத்தின் கவனத்தையும் பலஸ்தீன மக்களின் பக்கம் திருப்பியுள்ளார் நெதன்யாகு.
நெதன்யாகு வின் ஒரே நோக்கம் தொடர்ந்தும் இஸ்ரேலில் பிரதமராக இருந்து பலஸ்தீன மக்களை கசக்கி நசுக்கி வதை செய்வதாகும். இந்த இலக்கை அடைவதற்காக தான் அவர் பிறவி எடுத்துள்ளாரா என்ற சந்தேகம் ஏற்படுமளவுக்கு கடந்த காலங்களில் அவருடைய பலஸ்தீனத்தின் மீதான கொடுங்கோல் கோலோச்சி இருக்கின்றது
ஆனால் இஸ்ரேலிய மக்கள் அவருக்கு தேவையான ஆட்சி அதிகாரத்தை வழங்க தயாராக இல்லை என்பதை தொடர்ந்து நான்கு தேர்தல்களில் நிரூபித்துள்ளனர். ஆனால் எவ்வாறேனும் எதிர்க்கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு உள்ளூரில் தனது ஆட்சி பீடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார் நெதன்யாகு.
இப்போது நான்காவது தடவையாகவும் அதனை இழந்துள்ள நிலையில் மீண்டும் அதிகாரம் தனது கையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தேவையின்றி காசாவில் கைவைத்து மஸ்ஜிதுல் அக்ஸாவை பலிபீடமாக்கி மோசமான கொடும் செயல்களை புரிந்து கொண்டிருக்கிறார்.
இஸ்ரேலிய மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நெதன்யாகு தான் மட்டுமே இஸ்ரேலின் ஒரே மீற்பாலன் என்பதை அந்த மக்களுக்கு காட்டும் வகையில் பலஸ்தீன மக்களை மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தவிர அவருக்கு வேறு மார்க்கமே கிடையாது. அதுதான் இப்போது இடம்பெற்று வருகின்ற காசா மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் ஆகும்.
ஆனால் பலஸ்தீன இளைஞர்கள் முதல் பெண்கள் குழந்தைகள் வரை போராட்ட குணம் கொண்டவர்கள் தங்களை சீண்டி விட்டால் தாங்களும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் என்பது அவர்களுடைய பிறவிக்குணம். அதனடிப்படையில் பலத்த ராணுவத்தை எதிர்த்து நிராயுதபாணிகளாக வெறும் கற்களை மட்டும் ஆயுதமாகக் கொண்டு அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் நிச்சயம் அவர்களுக்கு இறை அருள் கிடைக்கும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அவர்களுக்காக இந்த ரமழானின் கடைசி காலத்தை உலக முஸ்லிம்கள் கழிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்ப்பார்ப்பும் வேண்டுகோளும் ஆகும்.
நேற்று ( 11) மாலை 13 கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தது.இதில் பலர் சிக்காகியுள்ளனர் .இதுவரை 30 பேரில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.170ற்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூர சூழலின் பின்னணியை பொறுத்தவரையில் 1967 ம் ஆண்டு இடம்பெற்ற ஆறு நாள் தொடர் போராட்டத்தில் ஜெரூசலத்தில் சில பகுதிகளும் , காஸாவின் சில துண்டுகளையும் இஸ்ரேல் பிடித்துக் கொண்டது.அன்று முதல் ஜெருசலம் எங்கள் தலைநகரம் என்றும் எங்கள் அடிப்படை வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பித்ததாகவும் முத்திரை குத்திக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் பாலஸ்தீனியர்களோ இது எங்களுடைய இடம் ,அதில் தான் எங்கள் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்று ஆணித்தரமாக கூறி வருகிறார்கள்.1967ஆம் ஆண்டு இஸ்ரேல் ஜெரூசலத்தை பிடித்தது முதல் இன்று வரைக்கும் அந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த வருடம் கொண்டாட்டம் மிகப் பெரிய ஊர்வலமாக வலம் வந்திருந்தது.நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.இது எங்கள் இடம் என்ற பதாகைகளை ஏந்தியவாறே இஸ்ரேலியர்கள் ஊர்வலம் சென்றது.இந்த ஊர்வலம் பலஸ்தீனிய மக்கள் உள்ளத்தை நொருக்கியே போட்டது எனலாம்.இந்த வரலாறும் ,போராட்டங்களும்,அடக்குமுறைகளும் , கண்ணீரும் , கோஷங்களும் தொடர்கதையானாலும் அதில் உள்ள ஒரு புள்ளியின் விரிவாக்கத்தை நாம் அவதானிக்கவே வேண்டும்.
கிழக்கு ஜெருசலத்தில் எப்படி யூதர்கள் குடியேற்றங்கள் வந்தது என்பதை நாம் தேட வேண்டும்.கடந்த சில வருடங்களாக கிழக்கு ஜெரூசலத்தில் தொடர்ச்சியாக கட்டப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் பாலஸ்தீனியர்களுக்காகவே காட்டப்படுகின்றது என இஸ்ரேல் கூறியது ஆனால் அதற்கு நேர் மாறாக யூதர்களையே அந்த குடியிருப்புகளில் மீள்குடியேற்றம் செய்தனர்.அதிலே வேடிக்கை என்னவென்றால் கிழக்கு ஜெருசலத்தில் உள்ள யூதர்கள் அங்கே நிரந்தர வதிவாளர்கள் ஆனால் ஜெரூசலத்தில் உள்ள பாலஸ்தீனியர்கள் அங்கு வீடுகளையோ , கட்டிடங்களையோ கட்டி வாழலாம்.அவர்கள் வெளியேற வேண்டும் . அவர்கள் நிரந்தர வதிவாளர்கள் என்பது இஸ்ரேலின் வியூகமாகும்.
அமெரிக்கா மீண்டும் இதில் சம்பந்தப்படுகின்றது இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலத்தில் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்கின்றது என அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.இது மிகப்பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்ற அச்சத்தில் கிழக்கு ஜெரூசலத்தில் கட்டப்பட்ட சகல குடியேற்றங்களையும் ஜோ பைடன் பதவியேற்கும் முன்பே நிறுத்தியது இஸ்ரேல்.
நாளுக்கு நாள் பாலஸ்தீனிய கழுத்துகள் நெருக்கப்படுவதும்,உயிர்கள் காவு கொல்லப்படுவதும் இந்த ஊடகங்களின் கண்களுக்கு தெரியவில்லையா என்ற மிகப் பெரிய கவலையான கேள்வி எழுந்துள்ளது.இஸ்ரேலுடன் மறைமுக நட்புறவை கொண்டாடும் அரபுலக நாடுகளின் வியூகமும் , பாலஸ்தீனியர்களின் தொடர் போராட்டமும் ஒரு நாள் எங்கோ நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என்று கூறுவதில் ஐயமில்லை .இஸ்ரேலுக்கெதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் வெகுவிரைவில் நிறைவுக்கு வரும் என்பது நிதர்சனமானது ஆனால் பாலஸ்தீனியர்களின் சத்தியப் போராட்டம் வருடா வருடம் தொடர்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.