காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது.
இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .
இதுவரை குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் எட்டு சடலங்கள் சிறுவர்கள் உடையது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன மேலும் பலர் இந்த விமானத் தாக்குதலில் சிக்குண்டு மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக ஷாட்டி அகதி முகாமுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதேவேளை மேட்குக்கரை பிரதேசத்தில் பலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
தம்மை எதிர்கொண்டு வரும் யுத்த தாங்கிகளையும் முழு கவசம் அணிந்த படைவீரர்களையும் வெறும் கற்களை கொண்டு அவர்கள் எதிர்த்து நிற்கின்றனர். இன்று நண்பகள் கிடைத்துள்ள தகவல்களின்படி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்ட 11 பலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது .