கஹட்டோவிட்ட மக்களின் முன்மாதிரி
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக பரவலாக வெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரணப் பணிகள் அந்தந்த பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அந்தவகையிலே கம்பஹா மாவட்டத்தின் அத்தனஹல்ல தேர்தல் தொகுதியில் இருக்கின்ற கஹட்டோவிட்ட பகுதி கடும் மழைகளுக்கு எப்பொழுதுமே வெள்ளத்திற்கு உற்படுகின்ற பிரதேசம் அந்தவகையில் இம் முறை ஏற்பட்ட மழையின் காரணமாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையில் அப் பிரதேச மக்களினால் இந்த நிவாரண நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுள்ளதை காணமுடிகின்றது.


இந்த பணியிலே முக்கியமாக சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் , இந்த அனர்த்தங்களினால் மக்களுடைய வாழ்க்கை இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் அவர்களுக்கு உதவி செய்வதற்காக பேதங்களை மறந்து அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படுகின்ற முன்மாதிரி மிக்க நடைமுறையாகும்.அந்த வகையில் கஹட்டோவிட்ட பிரதேச மக்கள் ஒரு சிறந்த முன்மாதிரியை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்பகுதியில் இருக்கின்ற பிரபலமான அமைப்புக்கள் பலவும் சேர்ந்து குறிப்பாக நபவிய்யா தரீக்காவை சேர்ந்தவர்கள் , அவர்களுடைய வாலிபர் அமைப்பை சார்ந்தவர்கள் , ஊரில் இருக்கின்ற ஏனைய நலன்புரி சங்கங்கள் ,தஃவா ரீதியான அமைப்பை சார்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து பெரும்பாண்மை சமூகத்தின் பங்களிப்பு மற்றும் அரச தரப்புடையவர்களின் பங்களிப்போடும் இந்த நிவாரண பணிகள் மிக வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த ஒன்றினைந்த செயற்பாட்டின் மூலமே நமது நாட்டிலும் ,பிரதேசங்களிலும் ஏற்படுகின்ற எந்தவொரு அனர்த்தத்தையும் , எந்தவொரு சவாலையும் வெற்றி கொள்ள முடியும் என்பதற்கான மிகச் சிறந்த ஒரு உதாரணமாக கஹட்டோவிட்ட மக்களுடைய இந்த செயற்பாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




