கொவிட் தொற்றுநோய்த் தாக்கமுள்ள இந்நேரத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இதற்கு, நாம் முன்னர் எதிர்கொள்ளாத பல ஆபத்தான காரணங்கள் உள்ளன.
இதற்கு முந்தைய பல சந்தர்ப்பங்களில் இலங்கை தீவிர டெங்கு தொற்று நோயை எதிர்கொண்டது. அந்த சந்தர்ப்பங்களில், சுகாதார சேவைத் துறையினருடன் மற்றும் விசேட பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர்களை பயன்படுத்தியதன் மூலம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது டெங்கு இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது. அத்துடன், தேவையான தீவிர சிகிச்சை வசதிகள் பெரும்பாலும் டெங்கு வைரஸிற்காகவே ஒதுக்கப்பட்டு இருந்தமையும் ஆகும்.
டெங்கு குருதிக் கசிவுள்ள ஒரு நோயாளியினது வாழ்க்கை மற்றும் இறப்பானது, திரவ கசிவு விகிதத்திற்கேற்ப உடலுக்கு வழங்கப்படும் தேவையான திரவத்தின் அளவைக் கொண்டே தங்கியுள்ளது. இச்செயற்பாடு ஒரு நாளைக்கு பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகாதார சேவையாளர்களின் தீவிர மேற்பார்வையின் கீழேயே செய்யப்படல் வேண்டும்.
இப்போது டெங்கு தொற்று நோய் ஏற்பட்டிருந்தால் , முக்கிய பிரச்சினை இங்கே தோன்றுகின்றது. பிற நாட்களில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தொற்றுநோயியல் நிறுவனம் (IDH மருத்துவமனை) மற்றும் போதனா வைத்திய சாலைகள் உட்பட பல இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் தற்போது கோவிட் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதைப் போலவே , விசேட பயிற்சி பெற்ற சுகாதாரத் துறையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், டெங்கு தொற்று நோயும் பரவும் நிலை காணப்பட்டால் , நோயாளிகளைப் பராமரிக்கும் சேவைகள் மிக இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும். இத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
டெங்கு இளம் குழந்தைகளின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. நாம் எம்மால் எளிதில் தடுக்கக்கூடிய டெங்கு தொற்று நோயினால், நம் அன்புக்குரிய குழந்தைகள் தங்கள் உயிருக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் முடிவடைய வாய்ப்புள்ளது. அத்தகைய ஒரு நாளில் ஏற்படும் வருத்தத்தை விட இன்றைய செயலினால் ஏற்படும் மதிப்பு அதிகம் என்பதை புதிதாக விவரிக்கத் தேவையில்லை.
பிற நாட்களில் டெங்கு பெருகும் இடங்களைக் கண்டறிவதற்காக வீடு வீடாக வந்து கொண்டிருந்த சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகக் குழுக்கள் இப்போது தடுப்பூசிகள் வழங்கல் மற்றும் கோவிட் நோயாளிகளை அடையாளம் காண அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனால் , எங்கள் வீட்டுச் சூழலை எம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல் பார்த்துக் கொள்வதற்குரிய அதிக பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இரண்டு தொற்றுநோய்களும் ஒன்றோடொன்று பிணைந்து பெருகி வரும் பயங்கரமான இந்நேரத்தில், நாட்டினதும் , நம் குழந்தைகளினதும் கடைசி பாதுகாப்பு அரணாக மாற எங்களுக்கு வாய்ப்பு தோன்றியுள்ளது. இதற்காக முன்வருவது, மற்றும செயற்படுவது என்பதிலேயே நம் குழந்தைகளின் வாழ்க்கை தங்கியுள்ளது.
இந்த டெங்கு தீவிர தொற்று நோயாக மாறுவதைத் தடுக்க என்ன செய்வதென்பது மிக எளிதானது. மற்றொன்று, கொவிட் கட்டுப்பாட்டிற்காக தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளும் மாறுவேடத்திலுள்ள ஒரு ஆசீர்வாதமாகும்.
வீட்டிலும், சூழலிலும் நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டுபிடித்து அழிக்க, நாம் நம் குழந்தைகளுடன் வீட்டில் செலவழிக்கும் நேரத்தைப் பயன்படுத்தலாம். நீர் தங்கியிருக்கக் கூடிய கொன்கிரீட் மேற்பரப்புகள், பீலிகள், மற்றும் மலர்ச்சாடிகள் என்பவற்றை பரிசீலனை செய்வது கட்டாயமாகும். எதிர்காலத்தில், நாங்கள் எளிதில் தவிர்க்கக்கூடிய நுளம்புகள் பெருகும் இடங்கள் பற்றிய விளக்கத்தை உங்களிற்கு வழங்கவுள்ளோம்.
வீட்டிலுள்ள குழந்தைகள் காலையிலோ மாலையிலோ வீட்டு முற்றத்தில் ஓடிப் பாய்ந்து விளையாடுவார்களானால், அங்கீகரிக்கப்பட்ட கொசு விரட்டிகளை பாவிப்பது போன்றே உடலை மறைக்கும் ஆடைகளையும் அணிவிப்பதும் உகந்ததாகும்.
காய்ச்சல் இரு நாட்களுக்கு மேல் நீடித்தால், டெங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவிட் நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவது போலவே தயக்கமின்றி அவசிய வைத்திய சிகிச்சை பெறுவது உயிரை காப்பதற்கான காரணமாகும்.
கடந்து கொண்டிருப்பது மிகவும் முக்கியமான கால கட்டமாகும். எமதும் எமது குழந்தைகளினதும் வாழ்க்கையை தோளில் சுமக்க வேண்டிய தருணமாகும். மட்டுப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுள்ள இந்நாட்களில், நாங்கள், எமது வீட்டினுள்ளும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய இப்போதே முயலுவோம். இன்று செய்ய வேண்டியதை ‘இன்றே செய்வது’ நாளைய மன வருந்தலுக்கு வழிவகுக்காது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம்