தொகுப்பு: அப்ரா அன்ஸார்.
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் அனைவரினதும் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜுப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஐயாயிரம் வருடங்களுக்கு முன் நபி இப்ராஹீம் நபி அவர்கள் மேற்கொண்ட தியாகத்தை நினைவுபடுத்தி விலங்கொன்றை(ஆடு,மாடு, ஒட்டகம்) பலியிடும் குர்பான் இடம்பெறுகின்றது.
ஆடு,மாடு அல்லது ஒட்டகத்தை பலியிட்டு குர்பானை நிறைவேற்றுகின்றனர்.இலங்கையில் இஸ்லாம் அறிமுகமானது முதல் முஸ்லிம்கள் இந்த கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.மாறி மாறி பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதற்கான வசதிகளை வழங்கியே வந்துள்ளது.உள்ளூராட்சி மன்றங்களில் அனுமதியைப் பெற்று விலங்குகளைப் பலியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கும் மாட்டினையே குர்பானுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.ஆட்டின் விலை அதிகமாக இருப்பதனாலும் , அதனை சொற்ப எண்ணிக்கையினருக்கே பகிர்ந்தளிக்க முடியுமாக இருப்பதனால் கூடுதலான பேர் மாட்டையே தெரிவு செய்கிறார்கள்.இலங்கையில் ஒட்டகம் கிடைக்காததால் ஒட்டகம் பலியிடப்படுவதில்லை.
பொதுஜன பெரமுன அரசு கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இலங்கையில் மாடுகளை அறுப்பதனை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பாக சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு 2020.10.06 ம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டது.2020.09.17 ம் திகதி பிரதமர் சமர்ப்பித்த pmo|cm|25|2020 அறிக்கையை வழங்குவது தொடர்பாக தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதை போன்றுள்ளது.
வக்பு சபை பள்ளிவாசல்களில் குர்பான் கொடுப்பதற்கு தடை செய்து அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட அறுப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் பள்ளிவாசல்களிலேயே குர்பான் இடம்பெறுகின்றது.பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதியைப் பெற்றே மாடுகள் அறுக்கப்படுகின்றன.வக்பு சபை சார்பில் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் சமர்ப்பித்துள்ள அறிக்கை பல இடங்களில் குர்பானுக்காக அனுமதி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு வக்பு சபைக்கு இவ்வாறான அறிவித்தல் ஒன்றை விடுக்கலாமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது .சிலர் இது தொடர்பாக திணைக்களத்தின் தீர்மானத்தை ஆட்சேபித்து வழக்குத் தொடர்வதற்கு தயாராகி வருகின்றனர்.பிரதமரின் கீழுள்ள வக்பு சபையினால் இத் தீர்மானத்தை பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் அப்துல் ஸத்தார், அரச ஹஜ் குழுவின் தலைவர் அர்கம் உவைஸ் மற்றும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தரான மல்வானை இஸ்மாயில் ஹாஜியார் ஆகியோர் கடுமையாக விமர்சித்து அறிக்கை விடுத்துள்ளனர்.வக்பு சபை என்ற தலைப்பில் இருக்கின்ற விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வக்பு சபை பள்ளிவாசல்களில் குர்பான் செய்ய முடியாது என தெரிவித்த போதும் சில இடங்களில் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் குர்பான் செய்ய வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர்.ஹெம்மாதகம பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர் விடுத்துள்ள அறிவித்தலில் வீடுகளில் குர்பான் செய்ய தடை என்றும், பள்ளிவாசல் வளாகத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அதற்கான அனுமதியை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.எனினும் வக்பு சபையின் இத் தீர்மானத்தினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரபினை இடமாற்ற வேண்டும் என மொட்டுக்கட்சி ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையான கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை குர்பான் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி எல்லை மீறி செயற்படுகின்றார் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
குர்பான் வழங்குதல் என்பது மார்க்கச் செயற்பாடாகும். இலங்கையில் காலாகாலமாக பள்ளிவாசலில் குர்பான் கொடுக்கும் வழமை இருக்கின்றது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதானது பாரதூரமானதாகும் .
கொழும்பு போன்ற நகரச் சூழலில் குர்பான் கொடுப்பதற்கு வீடுகளில் இடமில்லை என்பதால் நீண்ட காலமாக பள்ளிவாசல் காணிகள் மற்றும் வளாகத்திலேயே குர்பான் கொடுக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இந் நடைமுறை பல கிராமங்களிலும் இருக்கின்றன. கூட்டுக் குர்பான் நடைமுறை செய்யப்படும்போது முஸ்லிம்களின் மத்திய நிலையமாக பள்ளிவாசல்களையே தெரிவு செய்து அங்கு குர்பான் கொடுக்கும் வழமையையே இலங்கை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். இந்நிலையில், இதனை தடுக்கும் விதமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது மிகவும் பாரதூரமானதாகும்.
அவர் எந்த அடிப்படையில் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பிரதமரின் கீழுள்ள அமைச்சுக்கு கீழ் வருகின்றது. இந்நிலையில், யாரின் ஆலோசனைக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை பணிப்பாளர் கூற வேண்டும்.
அத்தோடு, பணிப்பாளருக்கு இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது. அது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணியும் இல்லை. எனவே, பணிப்பாளர் தனது அதிகாரத்தையும் தாண்டி முஸ்லிம் விவகாரங்களில் எல்லை மீறி செயற்படுகின்றார். ஆளும் தரப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அமைச்சரவையில் நீதியமைச்சர் அலிசப்ரியும் இருக்கின்றார். இந்த வியடம் குறித்து நீதியமைச்சர் கவனம் செலுத்தி உடனடியாக பணிப்பாளரின் குறித்த அறிக்கையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குர்பானை நிறுத்த அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
ஹஜ் பெருநாள் குர்பான் நடவடிக்கைகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நாடகமே மாடறுப்பை தடை செய்யுமாறு அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம் என அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அரசுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல பக்கம் அழுத்தங்கள் காணப்படுகின்றன. அவர்களின் வெளிநாட்டு கொள்கையால் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
மற்றொரு பக்கம் இனவாதத்தை கொண்டு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த இவர்கள் கூறிய பொய்களை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்த கடும்போக்கு அமைப்புகளே அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.
இவ்வாறு பல பக்க அழுத்தங்களை எதிர்கொள்ளும் அரசு இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட தமக்கு எதிராக உள்ள கடும்போக்கு அமைப்புக்களை அமைதிப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே மாடறுப்பு தடை தொடர்பாக அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்.
இதன்மூலம் அடுத்தவார ஹஜ்ஜூப்பெருநாள் நாட்களில் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் குர்பான் நடவடிக்கைகளை குழப்பவே அரசு முயற்சிக்கிறது.
இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன்பின்னரே இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு குறித்த அமைச்சுக்கு உள்ளது.
ஆனால் இவர்கள் வர்த்தமானியில் வெளியிட்டவைகளையே இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.ஆனால் வர்தமானியில் வெளியிடப்படாத ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத விடயத்தை நடைமுறைப்படுத்த அமைச்சின் செயலாளருக்கு எந்த அதிகாரமுமில்லை.ஆகவே இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாம் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பேச எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் இலங்கை,வை.எம்.ஏ பேரவை பலரும் கலந்து கொண்டு இக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி வழமை போன்று குர்பானுக்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வக்பு சபை ஏற்கனவே சமர்ப்பித்த கையளிப்பினை வாபஸ் பெற்று புதிதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
வக்பு சபை சார்பில் பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் விடுத்துள்ள அறிவித்தலில் பள்ளிவாசல் தவிர்ந்த இடங்களில் குர்பானை நிறைவேற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஆடு,மாடுகளை அறுப்பதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக சமர்ப்பித்துள்ள நிலையில் முஸ்லிம்கள் சட்டரீதியாக நிறைவேற்றும் குர்பான் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.