எது நடக்கக்கூடாது என நாம் பயந்துகொண்டிருந்தோமா அது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது-தொகுப்பு: வைத்தியர் ரிகாஷா காமில்!

Date:

கொவிட் விடுதியில் மிகவும் வேலைப்பளுமிக்க ஒரு பகுதிநேரக் கடமையை செய்து முடித்த பின்னர் இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.

 

எது நடக்கக்கூடாது என நாம் பயந்துகொண்டிருந்தோமா அது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. வைத்தியசாலை ஊழியர்களின் உதடுகளெல்லாம் உச்சரித்துக் கொண்டிருப்பது உச்சம் தொட்டுள்ள கொரோனா பற்றித்தான்.

 

இந்தக் கதைகள் எல்லாம் உங்கள் காதுகளை அடைந்தாக வேண்டும்.

நான் கடமை புரிந்தது கொரோனாவுக்கான விடுதியாக மாற்றப்பட்டிருந்த ஒரு சாதாரண விடுதியில். நாற்பது கட்டில்களைக் கொண்ட அந்த விடுதியில் எல்லாக் கட்டில்களும் நிரம்பி வழிகின்றன. மூன்றிலொரு பகுதியினருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

இரண்டு மூன்று பேர் தமது வாழ்வின் இறுதி நொடியை அண்மித்துள்ளதாகத் தோன்றுகின்றது. பலர் மூச்சுவிடுவதற்கான போராட்டத்தில் முனைப்புடன் இருப்பதைக் கண்டு கனத்துப் போகின்றது மனசு.

 

கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் பயங்கரத்தின் பிடிக்குள் சிக்குப்பட்டு பரிதவிக்கின்றனர்.

 

தம்மை ஏன் அடைத்து வைத்திருக்கின்றனர் என்ற கேள்விக்கு சில குழந்தைகள் விடை தேடிக் கொண்டிருக்கின்றன.

 

நாலாபுறங்களில் இருந்தும் வருகின்ற அழைப்புக்களால் தொலைபேசிக்கு ஓய்வே இல்லை. அவை எல்லாமே கட்டிலொன்றுக்கான போராட்டம் என்பது தாதியின் பதிலிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

 

அன்றாடத் தேவைகளுக்காக அல்லற்படுகின்ற பலரும் விடுதிக்குள் விடுதலையின்றி, தாம் வெளியேறும் நாளுக்கான எதிர்பார்ப்புக்களுடன் ஏங்குவது நன்றாகவே புரிகின்றது.

 

இன்னும் எவற்றையெல்லாம் நாம் எதிர்கொள்ளப் போகின்றோமோ….? – விடையில்லா வினாவுடன்!

 

இரு நிமிடமேனும் இருக்கையில் அமர்ந்துகொள்ள இடம் தராதளவுக்கான வேலைப்பளு.

 

எண்ணமெல்லாம் ‘இறைவா! அசம்பாவிதங்கள் எவையும் நடந்துவிடக் கூடாது!’ என்ற மௌனப் பிரார்த்தனையாகவே உள்ளது.

 

‘டெல்டா’ – நமக்குள் புகுந்து விளையாடுகின்றது என்பது மட்டும் தெரிகின்றது. எதிர்வரும் நாட்களில் எமது அன்புக்குரியவர்கள்…. ஏன் நாம்கூட ஒட்சிசனுக்கான போராட்டத்துடன் உயிரை இழக்க நேரிடுமோ…?

 

வைத்தியசாலைகளின் கொள்ளளவுகள் எல்லை மீறுமிடத்து மூச்சுத் திணறலுடன் எமது மக்கள் வீதி வீதியாக அலைவதைப் பார்ப்பதற்கான திராணியென்றால் சத்தியமாக எமக்கில்லை.

 

இப்போது இந்த பயங்கரத்தின் தொடக்கம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இனிவரும் நாட்களில் இதைவிட நிலைமை மோசமாகாதளவுக்கு கவனமாக இருப்போம்.

 

தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்ப்போம். எப்போதுமே தனிநபர் இடைவெளி பேணுவோம்.

 

நாமும் ரொம்பவே களைத்துப் போய்விட்டோம்!

 

Dr.Rikasha Kamil

Base hospital, wathupitiwela..

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...