உஸ்தாத் அப்துல் ஹமீத் பற்றிய சில குறிப்புக்களை இலங்கையில் உள்ள எழுத்தாளரான லபீஸ் ஷஹீத் எழுதியுள்ளார் அதனை Newsnow வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
உஸ்தாத் அப்துல் ஹமீத் அபூசுலைமான் எனக்கு அறிமுகம் ஆகி ஏறத்தாழ இருபது வருடங்கள் இருக்கும். ‘அல் குர்ஆனும் ஸுன்னாவும் – கால, இடப் பரிமாணங்கள்’ என்ற சிறு நூலின் ஒரு கட்டுரையை கலாநிதி அப்துல் ஹமீத் அபூசுலைமான் எழுதி இருந்தார் (மற்றையது தாஹா ஜாபிர் அல் அல்வானி எழுதியது). அல் குர்ஆன் மற்றும் நபிகளாரின் நடைமுறைகளை புரிந்து கொள்ளும் முறையை பற்றி பேசி இருந்த கட்டுரை எனக்குள் புதிய வெளிச்சங்களை பாய்ச்சியது. அதன் பிறகு பாம்பை தொடுகின்ற வசீகரமும் பீதியுமாக அப்துல் ஹமீத் அபூசுலைமானை வாசிக்கத் தொடங்கினோம். அவர் நான் இதுவரையில் காணாத புத்துலகை எனக்கு காட்டித் தருபவராக இருந்தார். வாசிக்க கடினமான உள்ளடக்கம் மற்றும் இலக்கிய நயமற்ற நடை காரணமாக புரிந்து கொள்ளலில் சவாலை தருபவை அவருடைய நூல்கள். ஆனால் நான் வாசிப்பின் இந்த சவாலை விரும்பி எதிர் கொள்பவன் எனும் வகையில் அபூசுலைமான் இன்னும் மனதுக்கு நெருக்கமானார். பொதுவாக அப்துல் ஹமீத் அபூசுலைமானின் முக்கியமான நூலாக அவருடைய ‘முஸ்லிமின் சிந்தனைச் சிக்கல்’ நூலை குறிப்பிடுவார்கள். ஆனால் உள்முரண்கள் பலவற்றை கொண்ட நூல் அது. தவிர இஸ்லாமிய அறிவு மரபு குறித்தும் அபூசுலைமானின் பார்வைகள் அவ்வளவு தீர்க்கமானவை அல்ல. என்னளவில் அபூசுலைமானின் முக்கியமான நூல்கள் ‘பெண்களை தண்டித்தல்’ மற்றும் ‘வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தல்’ மற்றும் ‘இருவகை சட்டங்களுக்கு இடையே மனிதன்’ ஆகிய மூன்றும் தான். பெண்களை தண்டித்தல் நூல் குடும்ப நிறுவனத்துக்குள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பெண்களை தண்டிப்பது எப்படி இறைத்தூதரின் வழிமுறைக்கும், இஸ்லாமிய ஷரீஆவின் உயர் நோக்கங்களுக்கும் முரணானது என்று சிறப்பாக பேசுகிறது. வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தல் நூல் ஒரே அரசியல் அமைப்புக்குள், நிலபுல எல்லைக்குள் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வன்முறையை பிரயோகிப்பதை தவிர்ப்பது இஸ்லாத்தின் கொள்கை என்பதை நிறுவுகிறது. இருவகை சட்டங்களுக்கு இடையே மனிதன் நூல் மனிதன் இயற்கை இயல்பான மண் சார்ந்த மற்றும் ஆன்மா சார்ந்த பண்புகளுக்கு இடையிலான முரணுறவை குறித்து பேசுகிறது. அதாவது மனிதனின் மண் சார்ந்த இச்சைகளும் மிருக உணர்வுகளும் அவனை கீழ்நோக்கி இழுக்க அவனுடைய ஆன்மாவோ அவனை மேல்நோக்கி கொண்டு செல்ல எத்தனிக்கிறது. இந்த முரண்பாடு தான் தனி மனித வாழ்வும், சமூக வாழ்வும் என்கிறார், அபூசுலைமான். ‘சர்வதேச உறவுகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை’ மிகச் சிறந்த நூல் தான் என்றாலும் அதில் மேலைத்தேய சர்வதேச உறவுகள் பற்றிய போதிய ஒப்பீட்டு ரீதியான விளக்கங்கள் இல்லை என்பது அதில் ஒரு குறை.
இஸ்லாமிய நாகரீகம் மற்றும் அறிவு மரபு பற்றி கொஞ்சம் மதிப்புக் குறைவான எண்ணம் கொண்டவர் அப்துல் ஹமீத் அபூசுலைமான். ஆனால் இஸ்லாமிய அறிவு மரபு பற்றிய அபூசுலைமானின் வாசிப்பு போதிய கோட்பாட்டுப் பலம் கொண்டது அல்ல. உதாரணமாக இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எதுவும் இல்லை என்பது அவருடைய கருத்து. ஆனால் இமாம் மாவர்தியின் அஹ்காமுஸ் ஸுல்தானிய்யா, இப்னு தைமிய்யாவின் ஸியாஸா ஷரயிய்யா போன்ற நூல்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்திய அரசியல் ரீதியான உடன்பாடான /நேர்மறையான தாக்கம் பற்றிய சிறந்த ஆய்வுகளை கல்விப் புலங்களில் காணலாம். ஆனால் மிகச் சிறந்த சிந்தனையாளரான அபூசுலைமான் அவற்றை அறியாதது விந்தை. யானைக்கும் அடி சறுக்கும்.
உண்மையில் பேரிழப்பு. உஸ்தாத் அப்துல் ஹமீத் அபூசுலைமானின் ‘இஸ்லாமிய மயப்படுத்தல்’ கருத்தாக்கத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்கள் இன்றைய உலக ஒழுங்குக்கு சமாந்தரமாக இன்னொரு உலக ஒழுங்கை உருவாக்குவதற்கே அது அழுத்தம் தருகிறது. ஆனால் நிலவும் சமூக அமைப்புக்குள் இஸ்லாத்தின் விழுமியங்களை வாழ வைக்கும் பங்களிப்பு சிந்தனை தான் இன்றைய தேவை. மாறாக பொதுச் சமூகத்தை விட்டு ஒதுங்கி எமக்கான தனித்துவ ஒழுங்குகளை உருவாக்கிக் கொள்வது அல்ல. முஹம்மத் அப்துஹு, அல்லாமா இக்பால் முதல் தாரிக் ரமழான் வரை இதைத்தான் பேசுகிறார்கள். ஆனால் உஸ்தாத் அபூசுலைமானின் முக்கியமான பங்களிப்பு இஸ்லாமிய கலைகளை அணுகுவதற்கான ஒரு முறைமையினை உருவாக்கியதே. அவருடைய ‘பெண்களை தண்டித்தல்’ மற்றும் ‘வன்முறையும் அரசியல் போராட்டத்தை நிர்வகித்தல்’ இரண்டும் அவருடைய முக்கியமான நூல்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!