கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 86% மானோர் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்
சுகாதார அமைச்சினூடாக எந்த ஒரு உண்மைக்குப் புறம்பான தரவும் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தான் நிராகரிப்பதாகவும், சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் காலப்போக்கில் ஏற்பட்ட சிறிய மாற்றங்கள் காரணமாக சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நேற்றைய (26) தினம் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், தொற்றா நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெறுகின்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவருக்கும், தடுப்பூசிகளை முழுமையாக வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 86% மானோர் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் 12% மானோர் முதலாவது டோஸ் தடுப்பூசியை மாத்திரம் பெற்றவர்கள். 2.5% மானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்கள். அவர்களும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் வீட்டிலேயே ஆன்டிஜென் பரிசோதனை மேற் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகள் தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதால் மாத்திரம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது. உலகின் பிற நாடுகளை பார்க்கும்போது அதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.