2022 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
41 வயதான ஷஹீத் அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 398 ஒருநாள் மற்றம் 99 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சஹிட் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த ஆரம்பத்திலே கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். 1996 இல் தன்னுடைய 2 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருந்தார். இதன் பிறகு இந்தச் சாதனையை குரே அண்டர்சனும் (36 பந்துகள்) டி வில்லியர்ஸும் (31 பந்துகள்) முறியடித்தார்கள்.
அப்ரிடி கடைசியாக 2016 இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார்.50 PSL ஆட்டங்களில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடத்துடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார்.கடந்த வருடம் லங்கா ப்ரீமியர் லீக்கில் Galle gladiators அணிக்கு தலைமை தாங்கினார் அத்தோடு அண்மையில் காஷ்மீர் ப்ரீமியர் லீக்கில் விளையாடி இறுதிப் போட்டியில் கிண்ணத்தையும் தட்டிக் கொண்ட அணியாக பதிவானது.
2022 PSL போட்டி எதிர்வரும் ஜனவரி, பெப்ரவரியில் நடைபெறவுள்ளது. இதுவரை மூன்று அணிகளில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
முல்தான் அணி எனக்கு அனுமதி தந்து, குயிட்டா அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்தால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடுவேன் என அப்ரிடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.கிரிக்கெட் இரசிகர்களினால் (Boom Boom) என அப்ரிடி அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.