கொவிட் – 19 பரவல் காரணமாக கஷ்டப்படுவோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம் | அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Date:

நாட்டில் தற்போது கொவிட் – 19 பரவல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தினமும் பலர் எம்மை விட்டுப் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் பலர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இஸ்லாம், சமூகத்துடன் சேர்ந்து வாழுமாறும் சமூக உணர்வுகளில் பங்கு கொள்ளுமாறும் சமூகத்தில் நலிவுற்றோர், பாதிக்கப்பட்டோர், தேவையுடையோர்களை இனங்கண்டு உதவி செய்யுமாறும் எமக்கு ஏவியிருக்கின்றது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ‘ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹு அந்த அடியானுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான். யார் ஒரு சகோதரனின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரை விட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான்.’ (ஸஹீஹுல் முஸ்லிம்)

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் வசதியுடையோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்மால் முடியுமான உதவிகளை வழங்க முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்போடு அழைக்கின்றது.

கடந்த காலங்களில் ஜம்இய்யாவின் வழிகாட்டலின் கீழ் பிரதேசக் கிளைகளில் உள்ள (DRCC) அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையங்கள்’ ஊடாகவும், மஸ்ஜித்கள் ஊடாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பலரும் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கியிருந்தீர்கள். குறித்த இச்செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறும் குறிப்பாக யாரெல்லாம் நோயினால் பீடிக்கப்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வருமாறும் ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

குறிப்பாக, நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கத் தேவையான (Antigen, PCR போன்ற) பரிசோதனைகளை அவசரமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவ்வந்தப் பகுதியிலுள்ள வைத்தியர்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு ஜம்இய்யாவின் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் முடியுமான பிரதேசங்களில் பொருத்தமான இடங்களை குறித்த பிரதேச மக்கள் சுகாதாரத் துறையினரின் ஆலோசனையுடன் தெரிவு செய்து, அவற்றை தற்காலிக கொவிட் – 19 சிகிச்சை நிலையங்களாக அமைத்துக் கொள்ள முன்வருமாறு ஜம்இய்யா அன்பாய் வேண்டிக் கொள்கின்றது. அத்துடன் வீடுகளில் இடவசதி பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் போது அது ஏனையோருக்கு பரவும் அபாயம் காணப்படுவதால், அவ்வாறானவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளை துறைசார்ந்தவர்களின் ஆலோசனையுடன் ஊர்மட்டத்தில் முடியுமான இடங்களில் மேற்கொள்ளுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

மேலும், பல அரபுக் கல்லூரிகளிலும் மஸ்ஜித்களிலும் பணிபுரியும் உஸ்தாத்மார்கள், இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுடைய மாதாந்த கொடுப்பனவுகள் கொடுக்கப்படாமல் இருப்பதாக தகவல் எமக்கு கிடைத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் தாராளத் தன்மையுடன் நடந்து அவர்களின் சம்பளத்தை துரிதமாக வழங்குமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் நாளாந்த, மாதாந்த கொடுப்பனவுக்கு பணிபுரிபவர்களுக்கும் அவர்களது சம்பளத்தை அவசரமாக உரிய முறையில் வழங்குவதற்கு உரியவர்கள் கவனம் செலுத்துமாறு ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...