இலங்கை வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா. ஒக்டோபர் 2-5 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென இலங்கை வெளிநாட்டமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்குமென அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை வெளியுறவுச் செயலாளருடனான இருதரப்புக் கலந்துரையாடலுக்கும் மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயங்களை மேற்கொள்வார்.இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.