20 தை ஆதரித்தவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் சட்டமூலமாகும் போதும் அதற்கும் கை உயர்த்துவார்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

Date:

ஒரே நாடு ஒரே சட்டம் இந் நாட்டில் சட்ட மூலமாகும் போது 20 க்கு கை உயர்த்தியோர் அதற்கும் கை உயர்த்துவர் என்பதில் சந்தேகமில்லை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடைசி நிமிடம் வரை ஐக்கிய மக்கள் சக்தியோடு கூடிக்குலாவி ஒற்றுமையாக இருந்தவர்கள் திடீரென அந்தக் கட்சியின் நம்பிக்கைக்கும் முஸ்லிம் சமுகத்தின் நம்பிக்கைக்கும் துரோகம் செய்து 20 க்கு கை உயர்த்தினார்கள். இதன் மூலம் சமுகத்திற்கு இதுவரை அவர்கள் பெற்றுக் கொடுத்ததென்ன என்று கேட்க விரும்புகின்றேன்.20க்கு வாக்களித்ததன் மூலம் இப்போது அரசின் பக்கம் தானே இவர்கள் உள்ளார்கள். அந்தப் பக்கத்தில் இருந்து தானே முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். காதி நீதிமன்றத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்கள். மத்ரசாக்களை மூட முன்னின்றார்கள். உலமாசபைக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்து அதனைக் கலைக்க வேண்டுமென்றார்கள். இவை போன்ற பல பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைகளுக்கு இவர்கள் என்ன தீர்வைப் பெற்றுத் தந்தார்கள்.

ஞானசார தேரர் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவர்கள் 20 க்கு கை உயர்த்தி அதிகாரம் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியிடம் அது குறித்துப் பேசி அவரது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவோடு அல்லது அவர்கள் முற்று முழுதாக நம்பிக்கை வைத்திருக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவோடு பேசி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கலாம். இவை எதனையும் அவர்கள் செய்ய வில்லை. மாறாக சாதாரண சங்கங்கள் தமது வரையறைக்குள் செய்வது போல ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதாக ஒரு போட்டோவை வெளியிட்டு படம் காட்டினார்கள். இதன் மூலம் நடந்தது என்ன?

இவர்கள் யாருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாக படம் காட்டினார்களோ அவர்தான் இன்று ஒரேநாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர். இப்போது இவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள். இது தொடர்பாக யாரிடம் முறைப்பாடு செய்யப் போகின்றார்கள் என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.

ஞானசேர தேரரின் பொதுபலசேனா அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் காரியாலயத்தை திறந்து வைத்தவர் அப்போது பாதுகாப்பு அமைச்சு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ என்ற பகிரங்கமான விடயம் இவர்களுக்கு தெரியாத விடயமா?

இப்போது இதே ஞானசார தேரர் தான் ஒரேநாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர். முன்பொரு தடவை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொன்னது போல கண்ணைத் திறந்து கொண்டு குழியில் விழுந்தவர்கள் தான் 20க்கு கை உர்த்தியோர்.

இவர்களுக்கு தேவையானவை வழங்கப்பட்டாகி விட்டது. இதனால் தான் அரசின் முக்கிய விடயங்களில் இப்போது இவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றார்கள். இருப்பினும் இது அவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை. எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் சட்ட மூலமாகி பாராளுமன்றத்திற்கு வாக்களிப்பிற்கு வருகின்ற போதும் இவர்களது ஆதரவை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற மந்திரம் அரசுக்குத் தெரியும். அதனால் அதற்கு ஆதரவாகவும் இவர்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...