போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு அழைப்பாணை விடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றில் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, வழக்கின் சாட்சியாக பெயரிடப்பட்டுள்ள தற்போதைய பொலிஸ் மா அதிபரை நாளைய தினம்(27) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் குழாம், சி.டி.விக்ரமரத்னவை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிட்டு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.