பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கை பொறியியலாளர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சர்வமதத் தலைவர்கள் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை இன்று சந்தித்தனர்.
சர்வமதத் தலைவர்கள் உள்ளடக்கிய குழுவில் பிரதமரின் பெளத்த விவகார இணைப்பாளரான கெளரவ பேராசிரியர் கஸ்ஸப்ப தேரர், கொழும்பு ஸ்ரீ அக்போதி விகாரையின் விகரதிபதி கலாநிதி கலகம தம்மரன்சி தேரர், பிரதமரின் இந்து மத இணைப்பாளரான கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரன் குருக்கள், பிரதமரின் முஸ்லிம் மத விவகார இணைப்பாளரான கலாநிதி செய்யத் ஹஸன் மௌலானா, பிரதமரின் கிறிஸ்தவ மத விவகார இணைப்பாளரான அருட்தந்தை கலாநிதி சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமரின் பெளத்த விவகார இணைப்பாளரான கெளரவ பேராசிரியர் கஸ்ஸப்ப தேரர் கருத்து தெரிவிக்கும் போது, இது ஒரு பயங்கரவாத செயல் இதனை நாம் கண்டிக்கின்றோம்,விசேடமாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் சிறந்த பிணைப்பு இருந்த சந்தர்பத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது கவலையளிக்கிறது.
ஸ்ரீ அக்போதி விகாரையின் விகரதிபதி கலாநிதி கலகம தம்மரன்சி தேரர், இது குறித்து வருத்தம் தெரிவிக்கும் போது,
இது ஒரு பயங்கரவாதச் செயல், இது ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறினார். தீவிரவாதம் அனைத்து வடிவங்களிலும் வெறுக்கப்பட வேண்டும், பரஸ்பர புரிந்துணர்வு மூலம் இரு நாடுகளுக்கும் இடையே மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவது அனைத்து குடிமக்களின் கடமையாகும்.
“இலங்கை மக்களுடன் சிறந்த பாலங்களை அமைப்பதற்காக பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் பௌத்த கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறது,” என்று தேரர் கூறினார்.அத்தோடு இறந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு உதவுமாறும் உயர் ஸ்தானிகராலயத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியாயமான ஆட்டத்திலும், நீதியிலும் நம்பிக்கை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் என்றும், அவர் குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமல்லாமல், கொடூரமான குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையையும் வழங்குவார் என்று இலங்கையர்கள் நம்புவதாகவும் பிரதமரின் கிறிஸ்தவ மத விவகார இணைப்பாளரான அருட்தந்தை குருகுலசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் இந்து மத இணைப்பாளரான கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள் கருத்து தெரிவிக்கும் போது: சூழ் நிலைகளைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்காக செயல்படுவது சட்டமியற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடிமக்களின் கொள்கையாக இருக்க வேண்டும்.
பிரதமரின் முஸ்லிம் மத விவகார இணைப்பாளரான கலாநிதி செய்யத் ஹசன் மௌலானா கருத்து தெரிவிக்கும் போது;
ஒருவரையொருவர் ஆறுதல்படுத்த சகிப்புத்தன்மை, சமரசம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
“முழு பாகிஸ்தானையும் சங்கடப்படுத்திய மற்றும் இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார்.இறந்தவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் பணிபுரிந்துள்ளார் அவருடைய இரண்டு சகோதரர்கள் இன்னும் நாட்டில் வேலை செய்கிறார்கள், ”என்றும் தன்வீர் அகமத் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.அத்தோடு பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.