பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் பேராசிரியர், கலாநிதி ஆதம்பாவா சர்ஜூன் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது பாடசாலைக் கல்வியினை நிந்தவூர் அட்டப்பள்ளம் வினாயகர் வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியினை அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும் பெற்றுக் கொண்ட பின்னர். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கற்று சிறப்புப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக் கழத்திலேயே விரிவுரையாளராகவும் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ‘மோதல் தீர்வும் சமாதானத்துக்கு தயார்படுத்தலும்’ பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவினை திறமைச்சித்தியுடன் பூர்த்தி செய்துள்ள இவர், பேராதனைப் பல்கலைக்கழத்தில் தனது முதுமாணிப்பட்டத்தினையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். தனது முதுதத்துவமாணிப் பட்டப்பின்படிப்பின் ஒரு பகுதியினை பூர்த்தி செய்யுமுகமாக NOMA புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் நோர்வே நாட்டின் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் 6 மாதகால கற்கையினையும் பூர்த்தி செய்துள்ளார். மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டப்படிப்பினை கடந்த 2017 இல் நிறைவு செய்துள்ளார்.
இலங்கைச் சூழலில் முஸ்லிம் அரசியல் தொடர்பான ஆய்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டு, சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து 20இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவ்வாய்வுக் கட்டுரைகளுள் பெரும்பாலானவை உலகத்தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. பேராசிரியர் ஆ. சர்ஜூன் அவர்கள் பிரசித்தி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய ஆய்வரங்குகளிலும் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.