நாட்டில் நிலவும் மின்சார உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சரவையின் விசேட கூட்டம் இன்று கூடுகின்றது.
அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த சந்திப்பு இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை, இன்றும் 16.30 மணி முதல் 22.30 மணி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடுகின்றது.
மேலும், இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதுடன் இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
541 மெகா-வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
‘நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளமையாகும்.