இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கடந்த சில தினங்களாக அமைதியின்மை நிலவி வருகின்றன.
இதேவேளை, அதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் இடங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை வழங்க முடியாது எனவும், பொலிஸ் அதிகாரிகளுக்கு வேறு பல கடமைகள் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
‘பொலிஸ் அதிகாரிகளுக்கு குற்றவியல் விசாரணை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகள் போன்ற பல கடமைகள் உள்ளன.
இதன் விளைவாக, இந்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பிற இடங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பை வழங்க போதுமான பொலிஸ் அதிகாரிகள் இல்லை.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தேவைப்படும் போது, அவ்வாறான இடங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எரிபொருள் தாங்கிகள், மற்றும் புதிய எரிவாயு சிலிண்டர்கள் வரும்போது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
‘எரிபொருள் நிலையங்கள் மற்றும் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு புதிய எரிபொருட்கள் வரும்போது சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதன்பிறகு, பொலிஸ் அதிகாரிகள், அந்த இடங்களுக்குச் சென்று, கூட்டம் ஓரளவு குறையும் வரை அங்கேயே இருப்பர்.
கூடுதலாக, குறிப்பிட்ட சில பிஸியான பொலிஸ் நிலையங்களின் பொறுப்பாளர்கள் நீண்ட கால அடிப்படையில் அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர், என்றும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா மேலும் கூறினார்.
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி எரிபொருளைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் சென்றதுடன், மோட்டார் சைக்கிள் சாரதி எரிபொருளைப் பெற்றுக் கொண்டு புறப்படத் தயாரான நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதியை கூரிய பொருளால் தாக்கியுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், ஆபத்தான நிலையில் வத்துப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறக்குமதிக்குத் தேவையான அமெரிக்க டாலர் கையிருப்பின் கடுமையான பற்றாக்குறையால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக நாடு பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, எரிபொருள், எரிவாயு மற்றும் பிற பொருட்களின் இருப்புக்கள் பல வரவுகள் மேற்கூறப்பட்ட பிரச்சினை காரணமாக தாமதமாகியுள்ளன.
இதனால், நாடு இன்று எரிபொருள், எரிவாயு, பால் மா, மண்ணெண்ணெய், மற்றும் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றை வாங்கும் நிலை காணப்படுகின்றது.