இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது ‘GOHomeGota’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் அறிவித்தார்.
அவரது பதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை விளைவித்தது, பல ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு பாராளுமன்ற அறைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றம் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை. நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு திடீர் என விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில், அவரிடம் கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.