நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Date:

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நைஜீரியாவில் வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள், ஆலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை.

இந்நிலையில், நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது எண்ணெய் கிடங்குகளுக்கு தீ வேகமாகப் பரவியது. சில நிமிடங்களிலேயே அங்கிருந்த எண்ணெய் கொப்பரைகள் வெடித்துச் சிதறின.

இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸ் உயர் அதிகாரி மைக்கேல் அபாட்டம் தெரிவித்தார்.

விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து நைஜீரியாவின் தேசிய அவசரகால நிர்வாக ஏஜென்சியின் (என்இஎம்ஏ) அதிகாரி இபியான்ஜி நாஜி கூறும்போது, “இதுவரை 80-க்கும் மேற்பட்ட கருகிய உடல்களைக் கண்டறிந்து எடுத்துள்ளோம். விபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந் திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆலைக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடி எடுத்துவருகிறோம். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

மேலும் ஆலைக்கு அருகில்உள்ள புதர்களிலும், வனப்பகுதிகளிலும் சிலரது உடல்கள் உள்ளதாக அறிகிறோம். வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்புக்காக அருகிலுள்ள புதர், வனப்பகுதிக்கு ஓடியுள்ளனர். ஆனாலும் அவர்களில் பலர் தீயில்கருகி உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்களைக் கண்டறிந்து அவற்றைக் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் ஆலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீயில் எரிந்து நாசமாயின” என்றார்.

ஆப்பிரிக்க கண்டத்திலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது நைஜீரியா. இங்குள்ள நைஜர் டெல்டா பகுதியில்தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு தினமும் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...