சமையல் எரிவாயு விநியோகம் குறைக்கப்படுவதாகக் கூறி லிட்ரோ நிறுவனம் மீது சேறு பூசுவதற்கு மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘மக்கள் சேற்றை வீச சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் இந்த பதிவுகள் அனைத்தும் போலியானவை. சமையல் எரிவாயு விநியோகத்தை நாங்கள் குறைக்கவில்லை, ஒரு நாளைக்கு 80,000 சிலிண்டர்களை விநியோகிக்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முக்கியமாக எரிவாயுவை நம்பியிருக்கும் நகரங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். நாங்கள் அன்றாடம் வெளியிடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் மேலும் 2 எரிவாயு ஏற்றுமதி கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அந்த சரக்குகள் வந்தவுடன் நிலைமை சீரடைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ‘முன்பு எரிவாயு பற்றாக்குறை இருந்தது, ஆனால் தற்போது பற்றாக்குறை இல்லை. நிலைமை முற்றாகச் சரியாகி பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும்’என்று அவர் தெரிவித்துள்ளார்.