இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

Date:

இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

இதன்போது, பேசிய அவர், ‘இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நிலைப்பாடு, 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, 28 கோடி மதிப்பில் மருந்து, 15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம்.

ஆனால், ஒன்றிய அரசின் (மத்திய அரசு) அனுமதியோடுதான் இதனை நாம் அனுப்ப முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரண, காரியத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள மக்கள் படக்கூடிய துன்பங்கள், துயரங்கள் நம் அனைவருடைய மனதிலும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

இலங்கை முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்காக வாகனங்கள் பல மணி நேரம் வரிசையிலே காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
மண்ணெண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடும் இருக்கிறது. இதனால் சமையல் செய்வதே சிக்கலுக்குரியதாக மாறியிருக்கிறது என்று செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன.
பல அத்தியாவசியப் பொருட்களுடைய விலை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. பேருந்துகள், ரெயில்கள் ஆகிய போக்குவரத்துச் சேவைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன் பல இடங்களில் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், மலையகப் பகுதிகளில் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் நமக்கு வருகிறது.

இதனால், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியக்கூடிய மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தனர்.

இதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம்,

தனது குடும்ப நிதியிலிருந்து 50 இலட்ச ரூபாயை அளிப்பதாகவும் பேரவையில் தெரிவித்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...