மே 01ம் திகதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எம்.பிகளின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு!

Date:

எதிர்வரும் மே 01ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வெளியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்விற்கு அனைத்து மக்களையும் அழைக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அறைகூவல் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் ஜனா, இரா.சாணக்கியன் மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் கூட்டாக இணைந்து இவ் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து தொழிலாளர்கள் என்னும் ஒற்றைச் சொல்லில் ஒன்றிணைந்து உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதையே மே தின வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மேதின அறைகூவலானது இன்றைய நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கானதாக முன்னெடுக்கப்படவேண்டிய நிலைக்கு நாட்டில் மாற்றம் பெற்றிருக்கிறது. யாரைக் குற்றம் சொல்வது யாரிடம் பாரத்தைச் சுமத்துவது என்பது புரியாதவர்களாக மக்களோ தொழிலாளர்களோ இல்லை. அரசாங்கமே அதனுடைய முழுப்பொறுப்பையும் ஏற்றாகவேண்டும் என்பதே அவர்களது முடிவாகும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதார நெருக்கடி மக்களுக்கு வாழ்வாதாரம் குறித்து கடும் சுமையைக் கொடுத்திருக்கிறது. அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோசம் இம்முறை தொழிலாளர் தினத்தின் கோசங்களில் முக்கியமானதாக இருக்கிறது.
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று அவர்களின் உரிமைகளைக் கோரி தோற்றம்பெற்ற தொழிலாளர் தினம் அரசியல் கட்சிகளையும், தொழிற் சங்கங்களையும், வெகுஜன அமைப்புகளையும், தனிமனிதர்களையும் ஒன்று சேர்த்தது என்பதுதான் வரலாறு.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடத்தில் உலகெங்கும் மே தினத்தைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மே தினத்தை தொழிலாளர்கள் அனைவரும் அமைதியுடன் நினைவு கூர்ந்திருந்தனர். அந்த நிலைமை இவ்வருடத்தில் சற்று மாற்றம் பெற்றிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவ்வாறான இடர் காலங்களிலும் தொடர்ச்சியாக தொழிலாளர் தினத்தினை கொண்டாடியிருந்தது. தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாளில் தொழிலாளரின் உரிமைகள் வெற்றி கொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்.
இம்முறை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மீனிசை சிறுவர் பூங்காவில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கி மே தினத்தினைக் கொண்டாட இருக்கிறோம். இத்தினத்தில் இன, மத, வேறுபாடுகள் பார்க்காது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...