மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், தம்மைச் சந்திப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதிகளையும் அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மூன்று பௌத்த பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை பொறுப்பானவர்கள் பதிலளிக்காத காரணத்தினால் மகாநாயக்க தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பிக்குகளின் பூரண சம்மதத்துடன் நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற தற்காலிக இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட ஆறு யோசனைகள் அடங்கிய கடிதத்தை முப்பெரும் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சமர்ப்பித்துள்ளனர். .
குறித்த ஆவணத்திற்கு இதுவரை எவரும் சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அடங்கிய ஆவணத்தை மாநாயக்க தேரர்களிடம் சமர்பிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கண்டிக்கு வந்திருந்த போது, மாநாயக்க தேரரைச் சந்திப்பதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக அவர் அஸ்கிரிய பீடாதிபதியை மாத்திரம் சந்தித்து உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்றும் கடந்த 29ஆம் திகதி மல்வத்தை மாநாயக்க தேரரைச் சந்தித்து நெருக்கடி நிலை தொடர்பான தமது முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை முன்வைக்க அனுமதி கோரியது.
தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டத்தை கூட்டுவதற்கு முப்படைகளின் மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.