பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ‘ஹூ’ சத்தம் செய்து அவர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர்கள் குற்றம் இழைத்திருப்பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க எம்.பி.க்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக வந்த இளைஞர்கள் குழுவொன்று மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது சட்டவிரோதமானது என்று கூறிய அவர், கைது செய்யப்பட்ட இளைஞரை விடுவிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
‘இது சர்வாதிகார ஆட்சியல்ல. இது ஜனநாயக நாடு. சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துவிட்டு திரும்பிய அவர்களை எப்படி கைது செய்ய முடியும்’ என கேள்வி எழுப்பினார்.