மக்களுக்குப் பணியாற்றி சேவகம் செய்பவனே மக்கள் தலைவன் எனும் நபி வாக்கை உறுதியாக பற்றிப்பிடித்து அமுலாக்கியவர் தான் இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஆட்சியாளர் அபூ பக்ர் (ரழியல்லா அன்ஹூ) அவர்கள்.
இன்று எமது இலங்கை நாட்டை எடுத்துக்கொண்டால் பதவி ஆசையில் மக்கள் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களை நாம் காணுகின்றோம்.
‘இறைத் தூதர்களைத் தொடர்ந்து மனிதப் படைப்பில் மிக மேலானவர், என்று வையகமும் புகழ்ந்தேத்தும் வளமார் சிறப்புக்குரியவர்கள் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.
இறைத் தூதரின் மரணம் நிகழ்வதை கேள்விப்பட்ட மக்கள் கலக்கமடைந்து துயர் மிகுந்த அந்த செய்தியால் அல்லோல கல்லோலப்பட்டு செய்தியை ஊர்ஜிதமாக்க ஸகீபா பனீ ஸஈதாவை நோக்கி படையெடுக்கின்றனர்.
மனிதாபிமானம், உண்மைக்கு உண்மை, வாக்குறுதியை நிறைவேற்றல், காரூண்யம், மக்கள் மீதான அளவற்ற கருணை என அத்துனை மானுட குணங்களையும் ஒரு சேரப்பெற்ற மகானின் மரணத்தை எந்த உயிர்தான் தாங்கும் ஜீரணிக்கும்.?
இறைத் தூதரின் நேசர் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்கள் நபியின் மரணத்தை உறுதி செய்து, மக்களை அமைதிப்படுத்தி நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
மக்களால் ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட முன்னரே மக்கள் இயல்பாக அவருக்கு கட்டுப்படுகிறார்கள்.
இறுதியில் மூத்த தோழர்கள்- ஸஹாபாக்களது நீண்ட கலந்துரையாடலின் பின் தேசத்தின் தலைவராக அவர் மாறினார்.
மக்களுக்காக உரையாற்றிய முதல் நாள் உரையிலேயே ‘நான் இறைவனுக்கு கட்டுப்படும் காலமெல்லாம் எனக்கு கட்டுப்படுங்கள் என்றார்.’
இறைவனுக்கும் அவன் வகுத்த ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட மறுக்கும் போது எனக்கு கட்டுப்பட அவசியமில்லை என்றார்.
அதே போல பதவியேற்ற முதல் நாளே தனதும் குடும்பத்தினதும் வாழ்வாதாரத்திற்காக சொந்தக்காலில் நின்று உழைக்கலானார். அரச சொத்துக்களை சுரண்டவோ பறிக்கவோ விசேட வரப்பிரசாதங்களை பெறவோ அவர் முனையவில்லை முண்டியடிக்கவில்லை.
அதுமட்டுமன்றி தொடர்ந்தும் பதவியில் அப்பி இருந்து கதிரையை சூடாக்கி அதிகாரம் செலுத்தவோ மக்களை அடிமைப்படுத்தவோ விரும்பவில்லை.
நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் பொறுப்பை சுமந்து, பொதுமக்களுக்கு ஆற்றும் பணிக்காக அரச நிதியிலிருந்து ஒரு திர்ஹம் (பணம்) கூட பெற எண்ணவில்லை.
ஆனாலும் அரச சேவை என்பது மக்களுக்கான மகத்தான சேவை, முழுநேரம் தழுவிய சேவை. எனவே அதிகுறைந்த தொகையையாவது பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற உமர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்களது அழுத்தமான வேண்டுதலின் பின் விருப்பமின்றி அதனை பெற்றுக்கொண்டார். ஆனாலும் அது அவரது மனதை உருத்தியது.
மரணமாவதற்கு முன்னர் மகள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்து இது வரை திறைசேரி மூலம் பெற்றுவந்த அந்த அரச நிதியத்துக்குப் பகரமாக தமது தோட்டத்தை திறைசேரிக்கு ஒப்படைக்குமாறு கூறினார்கள்.
அவ்வாறு அது 2ஆம்ஆட்சியாளர் கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இப்படித்தான் எமது முன்னோடிகள் இறைத் தூதரை அணு அணுவாகப் பின்பற்றி தேச பக்தியை தேச நலனை வாயால் மட்டும் வடிவாக சொல்லாமல் வாழ்ந்தே காட்டினார்கள்.
அரச நிதியை துஷ்பிரயோகம் செய்யாமல் களவாடாமல் மேலதிகமாகப் பெறாமல், மக்கள் தேவைகளை உணர்ந்து மரியாதையாக நடந்து காட்டினார்கள். பென்னம்பெரிய பொறுப்புகளில் அமர்ந்துள்ளோர்,
மோசடிகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
மறுமையின் இருள்களுள் அநியாயத்தின் இருளே அகோரமானது, பொறுப்புகளுக்கு பொருத்தமற்றவர் நியமிக்கப்பட்டால் மறுமை வெகு சீக்கிரம் வரும் என்பதை அதிகாரத்தில் பேராசையும் மோகமும் கொண்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
மாயவலைகள், சதிகள் மூலம் மக்களை ஏமாற்றலாம் மக்களின் இறைவனை ஏமாற்ற முடியாது.
தேசப்பற்றும் சகவாழ்வும் பள்ளிவாசல்களில் மிம்பர்-மேடைகளில், பயான்-உரைகளில் தொடங்க வேண்டியது மட்டுமல்ல, அது எம் வேலைத்தளத்தில், வீட்டில், தனிமையில் எல்லா மட்டங்களிலும் இருந்து ஆரம்பிக்கப் பட வேண்டும்.