நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று இரவு 9.00 மணிக்கு நாட்டு மக்களுக்கும் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது.
மே 9 திங்கட்கிழமை நாட்டில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிகக் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் கலவரம் வெடித்தது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முப்படைகள் குவிக்கப்படுவதற்கு முன்னரே, இந்தச் செயற்பாடு நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றது. சில மணி நேரங்களில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சுமார் ஒன்பது பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொள்ளை தொடங்கியது.
இந்த நிகழ்வுகளுக்கு காரணமான அசல் சம்பவத்தை நான் பாரபட்சமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் இதுவரை நடந்துள்ள உயிர் மற்றும் உடமைச் சேதங்களை அவதானித்து, தொடர்ந்து வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும் அதேவேளையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்படுவேன்.
தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தவும், நாடு அராஜகமாக மாறுவதை தடுக்கவும், தற்போதைய ஸ்தம்பிதமான அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ளவும் புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையையும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெறக்கூடிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க இந்த வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதன் பின்னர், 19வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமுல்படுத்தும் வகையில், பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும், ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சகலருடனும் கலந்துரையாடி அதற்கு இடமளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேவேளை மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை வழங்குவதற்கும் அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.