தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ. பாக்கீர் மாகாரின் 105ஆவது பிறந்த தினம் (மே 12) இன்றாகும். அதனையொட்டி இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது
இலங்கை அரசியல் சமூகப் பரப்பில் என்றும் நினைவுபடுத்தக் கூடிய ஒரு மகானாக பாக்கீர் மாக்கார் திகழ்கிறார்.
1917 மே மாதம் 12ஆம் திகதி பேருவளை மருதானையில் வைத்தியப் பரம்பரையில் பிறந்த பாக்கீர் மாக்கார், 80 வருடங்கள் வாழ்ந்து, 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி இவ்வுலகைப் பிரிந்தார்.
இலங்கைக்கு முதலில் முஸ்லிம்கள் காலடி வைத்த பேருவளையில் தனது அரசியல் சமூகப் பணியை ஆரம்பித்த மர்ஹும் பாகீர் மாகார், களுத்துறை மாவட்டத்தின் பிரபல சட்டத்தரணியாகத் திகழ்ந்தார்.
இவரது சட்டத்தரணிப் பணி முன்மாதிரிமிக்கதாக அமைந்திருந்தது. இன, மத பேதமின்றி ஏழைகளுக்கு இலவசமாக நீதிமன்றங்களில் ஆஜராகி நீதியைப் பெற்றுக்கொடுத்தார். இவரது இந்தப் பணி இவருக்கு மாவட்ட மக்கள் மத்தியில் அபிமானத்தை வென்றெடுக்க உதவியது.
சட்டக்கல்லூரி மாணவராக இருக்கும் போதே 1947 இல் பேருவளை நகரசபையில் சுயேட்சை அபேட்சகராகப் போட்டியிட்டார்.
அக்காலத்தில் பேருவளை பிரதேச அரசியலில் பணம் தலைவிரித்தாடியது. தனவந்தர்களுடன் மோதும் அளவுக்கு பாகீர் மாகாருக்கு பண வசதி இருக்கவில்லை.
அத் தேர்தலில் அவர் தோல்வியுற்றார். தோல்வியைக் கண்டு மனம் தளராத இளம் பாக்கீர் மாக்கார், 1950 இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு இதுவரை பிரதேசத் தனவந்தர்களால் அலங்கரிக்கப்பட்ட நகரசபைத் தலைவர் பதவியை தனது வசம் ஆக்கிக் கொண்டார்.
பிரதேச சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று நகர சபையின் தலைவரான இளம் பாகீர் மாகார், பேருவளை நகர சபையூடாக இந்நகரத்தின் புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.
உள்ளூராட்சி அரசியல் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த பாக்கீர் மாக்கார், முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்காவினால் பேருவளைத் தொகுதிக்கு ஐ.தே.க. பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இத்தொகுதிக்கு முஸ்லிம் ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதன் மூலம் களுத்துறை மாவட்டத்தில் பரந்து விரிந்து வாழும் முஸ்லிம்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வழி பிறந்தது.
1960ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாக்கீர் மாக்கார், அமோக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். 60 ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அவர், 65ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.
1970 தேர்தலில் தோல்வியுற்ற அவர், 1977 இல் போட்டியிட்டு இலங்கையிலே ஆகக் கூடுதலான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசில் சபாநாயகராகத் தெரிவானார். 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் படி சபாநாயகராகத் தெரிவானார். புதிய யாப்பின் படி நாட்டின் மூன்றாவது பிரஜையாக சபாநாயகர் கருதப்பட்டார்.
இக்காலகட்டத்தில் பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸின் திருமணம் நடைபெற்றது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் பிரதமர் ஆர்.பிரேமதாஸவும் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கு லண்டன் சென்ற போது இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பணிபுரியும் வாய்ப்பு பாகீர் மாகாருக்குக் கிடைத்தது.
இலங்கைக்கு பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சபாநாயகராகத் தெரிவான பாக்கீர் மாக்கார், சபாநாயகர் பதவிக்கு புது அர்த்தம் கொடுத்து செயற்பட்டார்.
பாராளுமன்ற அமர்வு நாட்களில் மட்டும் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு செல்லும் சம்பிரதாயத்தை மாற்றி, சபாநாயகர் அலுவலகத்தை முழுநேர அலுவலகமாக மாற்றிச் செயற்பட்டார்.
பாராளுமன்ற வரவு-செலவுகளை கணக்காய்வு அதிபதி மூலம் கணக்காய்வு செய்யும் முறையினை இவர் அறிமுகப்படுத்தினார். காலிமுகத்திடலில் இருந்த பாராளுமன்றக் கட்டிடம் ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்றப்பட்டது இவரது காலத்திலாகும்.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் புதிய பாராளுமன்றக் கட்டிடம் இவரது தலைமையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்படி தற்போதைய பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராகவும் இவரே பணிபுரிந்தார்.
அதேபோன்று, காலிமுகத்திடல் பாராளுமன்றத்தின் கடைசி சபாநாயகராகவும் இவரது பெயர் வரலாற்றில் பதிவாகியுள்ளது. மாகாண சபை உருவாக்கப்பட்ட போது, அதன் ஆளுநர்களாக மூத்த அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்டனர்.
1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31ஆம் திகதி இவர் தென் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆளுநராகவும் இவரது பெயர் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
மர்ஹும் பாகீர் மாகார், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் சமூக எழுச்சிக்கு பெரும் பங்காற்றியவராவார். குறிப்பாக, முஸ்லிம்களது அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக நிறைந்த பங்களிப்பினை அவர் செய்துள்ளார்.
நாட்டின் எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோது அகில இலங்கை முஸ்லிம் லீக் சார்பில் தோன்றி சாட்சியமளித்தது. காலாகாலம் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் முஸ்லிம் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்கும் பேச்சாளராகவே பாகீர் மாகார் பணிபுரிந்தார்.
களுத்துறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்காக பேருவளைத் தொகுதி இவரது வேண்டுகோளின் பேரிலேயே உருவாக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறை கொண்டு வரப்பட முன் பேருவளைத் தொகுதியில் இருந்து ஐ.தே.க. சார்பில் மர்ஹும் பாக்கீர் மாகாரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மர்ஹும் ஐ.ஏ.காதரும் மாறி மாறி தெரிவானார்கள். மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் இவர் தீவிர அக்கறை காட்டினார். இவர் ஒருமுறை இலங்கை முஸ்லிம்களுக்காக புறம்பான தேர்தல் தொகுதி முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பிரேரணை ஒன்றை முன் வைத்தார்.
அந்த அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்கு அக்கறையோடு செயற்பட்டார். பிற்பட்ட காலத்திலும் அகில இலங்கை முஸ்லிம் லீக், முஸ்லிம்களது அரசியல் பெரும் ஸ்தாபனமாகச் செயற்பட்டது.
முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகள் உருவாகு முன் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற அமைப்பாக இந்த அமைப்புத் தான் செயற்பட்டது. கலாநிதி ரீ.பி.ஜாயா, டாக்டர் எம்.சீ.எம்.கலீல் போன்ற தலைவர்களால் வழி நடாத்தப்பட்ட இந்த இயக்கம் இலங்கை முஸ்லிம்கள் இன்று உரிமைகளை வென்றெடுத்த அமைப்பாகும்.
இந்த அமைப்பின் உப தலைவர்களில் ஒருவராக இருந்த பாகீர் மாகார், எதிர்காலத்தை உணர்ந்து அதன் இளைஞர் அமைப்பினை புறம்பான, சுதந்திரமான ஓர் அமைப்பாக செயற்படுத்த விரும்பினார்.
அதன்படி முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுக்கு புதிய யாப்பொன்றைத் தயாரித்து அதனை தனியாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். 1978 முதல் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளை உருவாக்கி, ஒரு பலம்பெறும் சக்தி மிகு வாலிப அமைப்பாக உருவாக்கினார்.
சபாநாயகராக இருக்கும் போது முஸ்லிம் கிராமங்களுக்கு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவ்வப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும், அரசு மூலமும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கையில் ஆகக் கூடுதலான முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்த அரசியல்வாதியாக இவர் திகழ்கிறார். இவர் வாலிப முன்னணி களின் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும்போது 600க்கும் மேற்பட்ட கிராமங்களில் முன்னணிகள் அமைக்கப்பட்டன.
முஸ்லிம் இளைஞர்கள் இதன்மூலம் தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயற்படுவதற்கு ஊக்குவிக்கப் பட்டனர். எனது தந்தை முன்னாள் சபாநாயகருடன் நெருங்கிச் செயற்பட்டது எனது பசுமையான நினைகளில் இன்றும் உள்ளது.
மக்கள் துன்பம் துயரங்களை எதிர்கொள்ளும் போது அவர்களைத் தேடிச் சென்று உதவுவது பாகீர் மாகாரிடம் காணப்பட்ட ஒரு விசேட குணாம்சமாகும்.
கந்தளாய் குள உடைப்பின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் லீக் வாலிப முன்னணி மூலம் பெருந்தொகையான பொருட்களைத் திரட்டி எடுத்து வந்து பகிந்தளித்தமை நான் சிறுவனாக இருக்கும்போதே கண்டுள்ளேன்.
சபாநாயகராக, ஆளுனராக, அமைச்சராக நிறைந்த பங்களிப்புச் செய்த ஒரு தலைவராக பாகீர் மாகாரை நான் காணுகிறேன். அரசியலில் ஊழல் மோசடி பற்றி பேசுகின்ற இந்த யுகத்தில் பாக்கீர் மாக்கார், நேர்மையான, களங்கமற்ற ஒரு தலைவராக சகலராலும் இன்றும் மதிக்கப்படுகிறார்.