அரசியல் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கும், பொதுத்துறை நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. இதற்கு திறமையும் அனுபவமும் இன்றியமையாதது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது, பலரும் அதனை வியப்புடன் நோக்கினார்கள். ராஜபக்ஷவின் ஆட்சியை மேலும் சில தசாப்தங்களுக்கு அசைக்க முடியாது என, எதிர்த் தரப்பினர்கள் கூட பேசிக் கொண்டிருந்த சூழலில்தான் அவருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட கடந்திராத நிலையில், அவரை நாட்டு மக்கள் வீட்டுக்கு செல்லுமாறு கூறும் நிலை எப்படி ஏற்பட்டது? கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வி எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்வது முக்கியமானது.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கு முன்னர், சர்வதேசத்தில் அவர் பற்றிய குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் இருந்தன. அதனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதன் பின்னர், உலக நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்கவில்லை.
வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இலங்கையுடன் சாதகமான உறவு இல்லாமல் போயிற்று. இலங்கைக்கு டாலர் கிடைக்காமல் போனமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றிய மோசமான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் சர்வதேசங்களில் இருக்கின்றமையினால், இலங்கைக்கு கிடைக்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயின.
அரசியல் என்பது யதார்த்தமானதொரு விடயமாகும். நாட்டின் போக்கு, மக்களின் விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இணங்கவே, நாட்டின் தலைவர் செயற்பட வேண்டும். அதற்கு மாறாக செயற்படும் போது, இவ்வாறான பேராட்டங்கள் வெடிக்கும் நிலை ஏற்படுகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் தனது கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தனக்குப் பிடித்தமானவர்களை அவர் முன்னிலைப்படுத்தினர். அரசாங்கத்துக்குள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
நாட்டிலுள்ள குடும்ப ஆட்சி மீது மக்களுக்கு பெரும் வெறுப்பு ஏற்பட்டது. நாட்டுக்கு குடும்ப ஆட்சி சரிவராது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். தனது குடும்பத்தாரை அரசாங்கத்துக்குள் உள்வாங்கியமை ஜனாதிபதி செய்த பெரும் தவறுகளில் ஒன்றாகும்.
தன்னை செயல் வீரராகக் காட்டிக்கொண்ட ஜனாதிபதி, தனது குடும்பத்தவர்களுக்கு அதிகளவில் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்திருக்கக் கூடாது. தமது கட்சிக்குள்ளிருக்கும் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல், தனது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி அள்ளி வழங்கினார். மூத்த தலைவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.
இதேபோன்று, ஜனாதிபதி தனக்கான ஆலோசகர்களாக அரசியல் அனுபவம் மிக்கவர்களை விடவும், ராணுவம் உள்ளிட்ட வேறு துறை சார்ந்தவர்களையே வைத்துக் கொண்டுள்ளார். இதுவும் அவரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
விரோதப் போக்கும் ஜனாதிபதியின் தோல்விக்கு காரணமாக அமைந்த இன்னுமொரு விடயம் அவர்கள் கையில் எடுத்த இனவாதக் கொள்கையாகும். முன்னைய அரசாங்கங்களில் முஸ்லிம்கள் பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அதனை அப்போதைய அரசாங்கங்கள் ஒரு யுக்தியாகவே செய்திருக்கின்றன. மத்திய கிழக்கு உதவிகளைப் பெறுவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்.
இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதிலும், இலங்கையின் தேயிலையை பெற்றுக் கொள்வதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பிரதானமானது. இந்த விடயத்திலும் தற்போதைய அரசாங்கம் தவறிழைத்துள்ளது.
அதேநேரம், இந்த ஆட்சியில் நடைபெற்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் இலங்கைக்கு பாதகமான நிலைமையினையே தோற்றுவித்தது.
ஆட்சிக்கு வருவதற்காக சிலர் இனவாதத்தை பயன்படுத்தியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அதனைக் கைவிடவில்லை. தொடர்ந்தும் கையில் வைத்துக் கொண்டேயிருந்தனர். ஜனாதிபதியின் உரைகளில்; சிங்கள மக்களினாலேயே தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அடிக்கடி அவர் குறிப்பிட்டு வந்தமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும். இந்த நிலைமையானது தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்பான அவநம்பிக்கைகளை மற்றைய நாடுகளுக்கு ஏற்படுத்தியது.
எந்தவொரு நாடும் தனித்துச் செயற்பட முடியாது. ஏனைய நாடுகளின் தயவு கட்டாயம் தேவை. இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி தன்னையும் தனது நாட்டையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைத்தான் அதிகளவில் மேற்கொண்டார். இந்தச் செயற்பாடுகள் கூட, தற்போது நமது நாட்டை நெருக்கடியான நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கருத்தியல்வாதியாக இருந்துள்ளார். ஆனால், யதாரத்தவாதியாக இருக்கத் தவறி விட்டார்.
ராஜபக்சக்களின் ஊழல், வினைத்திறனற்ற நிர்வாகம், கொரோனா பாதிப்புகள் போன்றன சிங்கள மக்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட அரசாங்கம் படுதோல்விகண்டது.
இலங்கை வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத பொருளாதாரச் சரிவினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அரசியல் தெளிவுள்ள மக்களின் நடுத்தர வர்க்கத்தினர் இந்நிலைமையை விளங்கிக்கொண்டு, இதற்கு காரணகர்த்தாக்கள் ராஜபக்சவினரே என்ற முடிவுக்கு வந்தனர்.
எனவேதான் ராஜபக்சக்களுக்கு எதிராகப் போராடத்தொடங்கினர். சமநேரத்தில் இந்தப் பேரிடரில் இருந்து தம்மை மீட்டு வரக்கூடிய ஒரே நபர் ரணில் விக்ரமசிங்கவே என்ற நம்பிக்கையையும் அவ்வப்போது வெளிப்படுத்தினர்.
ரணிலின் இந்த நம்பிக்கைக்கு, ரணில் விக்ரமசிங்க சர்வதேசத்துடன் கொண்டிருக்கின்ற நல்லுறவுதான் காரணம். மற்றும் அவரது பதற்றமின்மை, அவசரப்படாமை, பொறுமை, அவமானங்களுக்கு உணர்ச்சிவயப்படாமை, விமர்சனங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளல், தெளிவான தூரநோக்கு போன்ற ஆளுமைப் பண்புகளை நிரம்பப்பெற்றவரான ரணில், நிதானமாகக் காய்களை நகர்த்தக்கூடியவர் எனலாம்.
நாடாளுமன்றத்திற்குள் பல ஆட்சிக் குழப்பங்கள், கட்சி தாவல்கள் நிகழ்ந்தபோதிலும், அவர் தனியே நின்றார். அவ்வப்போது இலங்கை எதிர்கொள்ளப்போகும் பொருளாதார இடர்கள் குறித்த தெளிவூட்டலை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.
மேற்கு சார்ந்த திறந்த பொருளாதாரக் கொள்கையிலும், வெளியுறவுக் கொள்கைகளில் மென்போக்கைக் கடைபிடிப்பவராயும் இருக்கின்றமையால்தான் சர்வதேச நாடுகள் ரணிலை விரும்புகின்றன. ரணிலின் இம் மென்முகம்தான் இப்போது இலங்கைக்குத் தேவைப்படுகின்றது.
ராஜபக்சக்கள் மேற்குநாடுகளுடன் கடைபிடித்த வன்முகம்தான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். இலங்கை அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் அறிந்து வைத்திருக்கின்றனரோ இல்லையோ, மேற்கு நாடுகள் நன்றாக ஆழமறிந்து வைத்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராகியிருக்கின்றர். அதுவும் ஓர் ஆச்சரியமிக்க பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறர். ஜனநாயக முறைப்படி மக்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் ஒருவர் பிரதமராக வருவதே நியாயமானது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரைத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அவரையே பிரதமராக்கி அழகு பார்ப்பதெல்லாம் நடக்கும் ஆச்சரியம்.
நிறைவேற்று அதிகார பலமுடைய ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோன்று மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மக்கள் ஜனநாயகம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலவீனமடையும். எந்த ராஜபக்சவினர் தேவையில்லை என மக்கள் நிராகரித்தார்களோ, அவர்களை மீள அரியணை ஏற்றவும் இதேபோன்றதொரு அதிகாரத் துஸ்பிரயோகத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதனாலேயே தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸ்ஸநாயக்க, பௌத்த பிக்குகள் சிலர், கோட்டாகோகம போராட்டக்காரர்களில் சிலர் இந்த நியமிப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றர். புதிய பிரதமருக்கு எதிராகவும் போராடத் தயார் என்கின்றனர்.
இப்போது செய்யவேண்டியது பெரும்பான்மை நிரூபிப்பல்ல, மக்கள் மூவேளை பசியாறுவதும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவமே ஆகும். ரணில் போன்றதொரு ஜனநாயகவாதி ஆட்சி பீடமேறினால் ஸ்திராமானதொரு அரசாங்கம் அமையும் என மேற்கு நாடுகள் நம்புகின்றன. ஸ்திரமான ஆட்சியமைந்தால், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, அமெரிக்கா, இந்தியா என ரணிலை விரும்பும் நாடுகள் நன்கொடைகளை, கடன்களை வாரிவழங்கத் தயாராக இருப்பதையும் இந்நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மீளவும் ஜனநாயகம் மலர்ந்தால், சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும். ஏனைய ஏற்றுமதித்துறைகளும் முன்னேற ”கோட்டாகோகம” போராட்டக்காரர்களது பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். முடிவில் ரணில் விக்ரமசிங்கவினால், சுபீட்சமானதொரு நாடு கிடைத்துவிடும். அந்த சுபீட்சத்தின் ராஜபக்சக்களை ஆட்சிபீடமேற்றுவர். இதுவொரு அரசியல் சங்கிலியாகத் தொடரும்.
ஆனால் இவ்விடயத்தை மக்கள் இன்னமும் விளங்கிக்கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை.
எம். எம். ஷஹீர் தாஜ் (LLM, LLB (Hons)).
மனித உரிமை ஆர்வலர், சட்ட ஆலோசகர்.