கறிக்கோப்பைகள் பரிமாறப்படட்டும்: நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் சிறிய முன்னெடுப்புகள் பலரைப் பசியாற்றும்!

Date:

குறிப்பு: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்படும் நிலையை பார்க்கின்றோம்.

இந்த நிலைமையிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான ஆலோசனையை கட்டுரையாளர் முன்வைக்கின்றார். ஆகவே வாசகர் நலன்கருதி இந்த ஆக்கத்தை நாம் மீள் பிரசுரம் செய்கின்றோம்.

சில நாட்களுக்கு முன்னர், அந்தக் கிராமத்துக்கு சாப்பாட்டுப் பார்சல்களோடு போயிருந்தோம். சின்னக் கிராமம்தான்.

கையில் இருந்த 40 பார்சல்களையும் கொடுத்தோம். விநியோகம் நடக்கத் தொடங்கியது.

யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. பெரியவர்களும் வந்து வாங்கிச் சென்றார்கள். கொஞ்ச நேரம் அங்கிருந்தோம். பின்னர் வந்து விட்டோம்.

அந்த விநியோகத்திற்குப் பொறுப்பாக இருந்த தமிழ் நண்பரை நேற்று சந்தித்தேன். எல்லா விநியோகமும் சீராக நடந்ததாகச் சொன்னார்.

2.30 மணி தாண்டியும் கொடுபடாமல் இருந்த மூன்று வீடுகளுக்கு அவரது மகளிடம் பார்சல்களை அனுப்பி வைத்தாராம்.

அந்த நேரம் ஒரு வீட்டில் சோற்றைக் கரைத்துக் குடிக்க ஒரு பிள்ளை தயாராகிக் கொண்டிருந்ததாம். இந்தப் பார்சல்கள் போனதும், அதை வைத்து விட்டு இதைச் சாப்பிடத் தொடங்கியதாம்.

சமைக்க வழியின்றி இப்படிப் பலர் இருக்கிறார்கள். நம்மைச் சூழவுள்ளோரும் இப்படி இருப்பார்கள்- இருக்கிறார்கள். வெளியே சொல்ல மாட்டார்கள்.

வெட்கம் அவர்களைப் பிடுங்கித் தின்னும். நாம்தான் நிலைமையை உய்த்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். காதும் காதும் வைத்தால் போல் இரகசியமாக அவர்களுக்கு உதவ வேண்டும்.

இன்னொருவர் தொடர்பு கொண்டு, இன்னாருக்கு 5 பார்சல் தேவை என்றார். அவர் சொன்ன பின்னர்தான் எனக்கும் உறைத்தது. பின் அது பற்றி இன்னொருவருடன் பேசி அதற்கு ஏற்பாடு செய்தேன்.

ஒரு காலத்தில் நடு ஊருக்குள் நன்றாக வாழ்ந்த குடும்பம். அவர்களது இன்றைய நிலையை நன்கறிவேன்.

வாழ்க்கை ஒரு சுழல் போன்றது. எல்லோருக்கும் எல்லாக் காலமும் ஒரே மாதிரி அமைவதில்லை.

ஆதலால் தூரம் தொலை போவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் நமது பக்கத்து வீட்டைக் கவனிப்போம். வாய் விட்டுக் கேட்க வெட்கப்படுவோரைப் புரிந்து கொள்வோம்.

அயல் வீடு என்பது உங்களைச் சுற்றியிருக்கிற 40 வீடுகள் என்று, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சொன்னது எப்போதும் நமக்கு நினைவில் இருக்கட்டும்.

முந்திய காலங்களில் முருங்கை இலைச் சொதி காய்ச்சினால் கூட, பக்கத்து வீட்டுக்குக் கொடுப்பார்கள். விசேடமான கறி என்றால் சொல்லவே தேவையில்லை.

கறிக்கோப்பைகள் போவதும் வருவதும் அழகியதொரு பண்பாடாகவும் பழக்கவழக்கமாகவும் இருந்தது. இப்போதும் இருக்கிறதுதான்.

ஆனால், குறைந்து விட்டது. உறவுகளோடு மட்டும் அதைச் சுருக்கிக் கொள்கிறார்கள். இந்தக் காலத்தில் கறிக்கோப்பைகள் பரிமாறப்படும் காட்சிகள் அதிகரிக்கட்டும்.

பெரிய பெரிய திட்டங்களை விட, இப்படியான நடைமுறைச் சாத்தியமான சிறிய முன்னெடுப்புகள் பலரைப் பசியாற்றும்.

(மூலம்: சிராஜ் மஸுர்)

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...