ராஜஸ்தானில் டெய்லர் ஒருவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததால், ஆத்திரமடைந்த இருவர் தையல்காரர் ஒருவரை கொடூரமாக கொலை செய்து, வீடியோ வெளியிட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதய்பூர், தன் மண்டி பகுதியில் கன்ஹைய லால் என்பவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹைய லால் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 28) கன்ஹைய லாலின் கடைக்குள் புகுந்த இரண்டு பேர் கூர்மையான ஆயுதங்களால் கன்ஹைய லாலைத் தாக்கி, தலையை துண்டித்து, வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாகப் பகிரப்பட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த கொடூர கொலையைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல் துறையினர் கொலை தொடர்பாக முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “டெய்லரை கொலை செய்து வீடியோ வெளியிட்ட முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், ரியாஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் துணி அளவு கொடுப்பது போல் கடைக்குள் வந்துள்ளனர். ஒருவருக்கு கன்ஹைய லால் அளவு எடுக்கிறார், மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். இதையடுத்து திடீரென கன்ஹைய லாலை வெளியே இழுத்து கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கழுத்தில் தாக்குகின்றனர். பின்னர், இருவரும் தங்களை முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் என அடையாளம் சொல்லி எச்சரிக்கை விடுத்து, டெய்லரின் தலையை துண்டித்தனர்” என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த அப்பகுதி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினர். நகரின் முக்கியப் பகுதிகளில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி கூறுகையில், ஜெய்ப்பூரில் இருந்து இரண்டு ஏடிஜிபிகள், ஒரு எஸ்.பி., மற்றும் 600 கூடுதல் காவல் படையினர் உதய்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கொடூர சம்பவத்திற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய விசாரணை நடத்தப்படும். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.
அதேவேளை முஸ்லிம் மத அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி ஹிந்த், உதய்பூர் சம்பவம் ‘காட்டுமிராண்டித்தனமானது, நாகரீகமற்றது, இஸ்லாத்தில் வன்முறையை நியாயப்படுத்த இடமில்லை’ என்று கூறியுள்ளது.
மேலும், ‘நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த குடிமகனும் சட்டத்தை தன் கையில் எடுக்கக்கூடாது. சட்டம் வெல்லட்டும்’ என்று அந்த அமைப்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
(தகவல்:etvbharat)