தேயிலை பயிர்ச்செய்கைக்காக 15,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மொத்தமுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தில் 15,000 மெற்றிக் தொன் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய அரசின் கடன் திட்டத்தின் கீழ் இந்த உரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய பெறப்பட்ட 44,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தில் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்களினால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.
காய்கறி சாகுபடிக்கு குறிப்பிட்ட கலப்பு உரத்தை உருவாக்கி, அந்த உரத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சந்தைக்கு விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுக்கும்படியும் ஆலோசனை வழங்கினர்.