போராட்ட களத்தில் தற்போது பைத்தியக்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் என்ற ஒரு கூட்டமே இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள புராதன புகைப்படங்களில் கையொப்பமிட்ட குழுவினரிடம், இந்த நாட்டிற்கு எவ்வாறான விடுதலை கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்கள் முழு மனதுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் போராட்டக்காரர்களிடம் இருந்து நாகரீகமற்ற நடத்தையை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், போராட்டக்காரர்களின் வெறித்தனமான வேலையினால் மக்கள் போராட்டத்தினால் தற்போது சோர்வடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்கள் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கீழ்த்தரமாக நடத்தியதாகவும், போராட்டத்தின் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீவிரவாதிகளின் வன்முறைகளை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.