அடிமட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும் வேலை செய்ய முடியாத அனைவரையும் வெளியேறுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த கால பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்பித்ததாகவும், எதிர்காலத்தில் நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கூறவில்லை என்றும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உடனடியாக இணையுமாறு அனைவரையும் அழைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரிவினை காலம் நிறைவடைந்துள்ளதால், நாட்டுக்கான தீர்மானங்களை அனைவரும் தாமதமின்றி எடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டுக்கு புதிய அரசியல் கோட்பாடு மற்றும் கலாசார அரசியல் பயணம் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, பழைய அரசியல் அமைப்பு தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அழைக்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.