இலங்கையின் அரசியல் மேலாதிக்கமே நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான வருவாயை உருவாக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு அரசியலில் விரிவுரையாளர் மதுரிகா ராசரத்தினம் இதனை தெரிவித்துள்ளார்.
இணையதளம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலில் பங்கேற்ற அவர் இலங்கையில் கடன் பெருக்கத்துடன் கூடிய அரசின் தீவிர இராணுவமயமாக்கல் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையின் இராணுவம் உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும். இலங்கை தற்போது இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய இராச்சியத்தை விட அதிக தனிநபர் இராணுவத்தை கொண்டுள்ளது.
இராணுவம் வடக்கு-கிழக்கை பிரதானமாக நிரப்பியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அண்மைய அவதாரங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், ராஜபக்ச ஆட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்த அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் இனவாத இயல்பு நாட்டின் மீதான கடன் சுமையை அதிகரித்தன என்று குறிப்பிட்டார்.