ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த பிரேரணைக்கு 47 நாடுகள் வாக்களிக்க உள்ளதாகவும், 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவை பெற முடியாவிட்டால் அந்த பிரேரணைகளால் இலங்கை தோற்கடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்க வேண்டும் என்றும், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால், இந்தியாவுக்கு ஆதரவான பல நாடுகளான தென்னாபிரிக்கா, கரீபியன் நாடுகள் உட்பட சுமார் 10 நாடுகளின் ஆதரவை இலங்கை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான ஆதரவை வழங்காமல் இந்தியா மௌனமாக இருந்தால் அந்த முன்மொழிவுகளால் இலங்கை தோற்கடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்தப் பிரேரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் அல்லது 7ஆம் திகதி முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்கேற்ப ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பிரேரணைகளை கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஜெனீவாவில் நடைபெறுவதாகத் தெரிகின்றது எனவும் இலங்கையை ஒரு நாடாக தனிமைப்படுத்துவது தவறான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு ஒரு நாட்டின் மனித உரிமைகளை அபிவிருத்தி செய்வதும் அதற்காக முதன்மையாக செயற்படுவதுமே தவிர அவ்வாறான பிரேரணைகளை கொண்டு வந்து அந்த நாடுகளுக்கு எதிராக செயற்படுவதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள், புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கிணங்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும், அந்த அமைப்புக்களை எவ்வளவோ விடுவித்தாலும் ஈழத்தை வென்றெடுப்பதற்காகவே போராடுவதாகத் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.