பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் இந்த தகவல்கள் வழங்கப்படாவிட்டால், பொலிஸ் மற்றும் தகவல் அதிகாரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுரேன் டி.பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரித்து தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 முதல் நவம்பர் 2021 வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயதுப் பிரிவுகள், ஆண் மற்றும் பெண் எண்கள் உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு, பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் அறியும் சட்டக் கோரிக்கை அனுப்பப்பட்டது.
இப்போது பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷன் கலகே, சட்டத்தரணி கோரியுள்ள தகவல், சம்பந்தப்பட்ட சட்டத்தின் கீழ் உள்ள தகவல் வகையுடன் தொடர்புடையது அல்ல என பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி சட்டத்தரணி சுரேன் டி.பெரேரா தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டார்.
மேல் நீதிமன்றத்தின் ஆணையாளர்களான (ஓய்வுபெற்ற) உபாலி அபேரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் ரோஹினி வல்கம, சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி ஆகியோரினால் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.