நிர்மாணத்துறையின் பராமரிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிர்மாணத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மத்தியதர வர்க்க வீட்டுத்திட்டங்கள் மற்றும் வீதித்திட்டங்களின் நிர்மாணப்பணிகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஒப்பந்ததாரர்கள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்குமாறும் களப்பணியாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிர்மாணத்துறைக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.