சமன் புஷ்ப லியனகேயினால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் கொழும்பு மாவட்ட கல்விப் பணிப்பாளர் கரவிலகொட்டுவே தம்மதிலக ஹிமி பிரதான உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்திய இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான ஷெய்க் ஸபியுர் ரஹ்மான் முபாரக் பூரி அவர்களால் உர்து மொழியில் எழுதப்பட்ட இந்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு நூல் இதுவரை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவலாக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இந்தப் புத்தகத்தை சிங்கள மொழி வாசகர்களுக்கு முன்வைக்கும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாக அழகியற்கலை பீடத்தின் வருகை தரு விரிவுரையாளர் சமன் புஷ்ப லியனகே, சந்த தெகட சந்த (நிலவைப் பிளந்த நிலவு) எனும் பெயரில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.
லியோ டால்ஸ்டோய், மக்ஸிம் கார்கி , பெர்னாட் ஷா, ஆர் கே நாராயன் போன்ற பலரின் புத்தகங்களையும் இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவர் சிங்களத்தில் மொழிபயர்த்த சாமுவேல் பெக்கேயின் என்ட் கேம் நாடகம் சிறந்த மொழிபெயர்ப்பு நாடகத்துக்கான இளைஞர் விருதை வென்றது. அத்துடன் ரெஜினோல்ட் ரோஸ் எழுதிய டுவெல்வ் அங்க்ரி மென் நாடகத்தின் சிங்கள மொழிபெயர்ப்புக்காக இவருக்கு அரச சாகித்திய விருதும் வழங்கப்பட்டது.
சிங்கள சமூகத்தின் பல புத்திஜீவிகளும் கலந்து கொள்ளவுள்ள இந்த நிகழ்வினை பஹன மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.