கோவை கார் வெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருவதால், இந்த வழக்கை என்.ஐ.ஏக்கு பரிந்துரைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கார் வெடிப்பில் ஜமேசா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர்.
ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏ. வால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார்.
ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர்.
இதேவேளை கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தீவிரவாத தாக்குதல் சம்பவம் தக்க நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பெருமை தமிழக காவல்துறையைச் சேரும். ஆனால் அதற்கு பின் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க 4 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டது மிகவும்தவறு.
நமது எதிராளிகளுக்கு நம் வளர்ச்சி பிடிக்கவில்லை. புல்வாமா, கல்வானில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.
அதற்கான பதிலடியை நாம் வலுவாக கொடுத்தோம். தீவிரவாதத்தால் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், இது தற்போது எடுபடாது. கோவையில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்கள் சார்ந்த பி.எஃப்.ஐ அமைப்பு தடை செய்யப்பட்டவுடன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.